Aran Sei

மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ‘நாங்கள் பனங்காட்டு நரிகள்; சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள் என்றும் நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 2), காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லம், அவரது கணவர் சபரீசன் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது, இச்சோதனைகள் குறித்து பேசியபோது, “நான் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் பயணித்து திருச்சி வந்து இறங்கினேன். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் காலையில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல் – ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை

“இந்த அதிமுக அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பது மோடி அரசுதான். ஏற்கெனவே மோடி அரசு, தமிழக முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. அதை மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன். இந்த ஸ்டாலின் மிசாவையும், எமர்ஜென்சியையும் பார்த்தவன். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – பாஜக தலைவர் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பரபரப்பு

மேலும், “இன்னும் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள் தான் மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுத்து காலில் விழுந்து கிடக்கபார்கள் ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம். எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 ஆம் தேதி என்பதை மறந்துவிடக் கூடாது.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்