Aran Sei

ஹிஜாப் அணியும் சட்டஉரிமை கோரும் மாணவிகள் – பாகிஸ்தானுக்கு போக சொல்லும் ஸ்ரீராம் சேனா தலைவர்

ர்நாடகாவில் உள்ள சில பள்ளிகளில் ஹிஜாப் (இஸ்லாமிய தலை கவசம்) அணிவது தொடர்பாக சர்ச்சைகள் மத்தியில், “சீருடைகளை அணிவதை மாணவிகள் மறுப்பது பயங்கரவாத மனநிலையை காட்டுகிறது. அத்தகைய மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பிரமோத் முத்தாலிக், “இந்த மூடத்தனமான மனநிலை அவர்களை (மாணவிகளை) பயங்கரவாதிகளின் நிலைக்கு கொண்டு செல்லும். இப்போது ஹிஜாப் என்கிறார்கள். அடுத்ததாக புர்கா (முக்காடு) கேட்பார்கள். அடுத்து, மேலும் தொழுகையும் மசூதியும் கேட்பார்கள். இது பள்ளியா அல்லது உங்கள் மத வழிபாட்டுத் தளமா? இந்த விவகாரம் தொடர்பாக பொது விவாதங்களுக்கு இடங்கொடாமல், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“மாணவிகளுக்கு (ஹிஜாப் கேட்கும் மாணவிகளுக்கு) இடமாற்றச் சான்றிதழ்(டிசி) வழங்கி வெளியேற்ற வேண்டும். இந்த மனநிலை மிகவும் ஆபத்தானது. ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோலார் சிந்தாமணி தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகள் தொழுகைச் செய்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ள பிரமோத் முத்தலிக், “நீங்கள் இந்தியாவை பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானாக்க விரும்புகிறீர்களா? உங்கள் பிரிவினைவாத மனநிலையுடன், ஹிஜாப் மற்றும் புர்காவை அணிந்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் கோரினால், பாகிஸ்தானுக்கு போங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை ஆடைக் கட்டுப்பாடு விதியைக் காரணம் காட்டி வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்னும் அக்கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாடு நீடிக்கிறது.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததை எதிர்த்தது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

‘உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ – இஸ்லாமிய மாணவிகள் உரிமைக்குரல்

நான்கு மாணவிகளில் ஒருவரான ரேஷாம் பாரூக் சார்பில் அவரது சகோதரர் முபாரக் பாரூக் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மாணவிகள் ஹிஜாப் அணியும் உரிமை என்பது அரசியலமைப்பின் 14 மற்றும் 25 வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அம்மாணவிகளில் ஒருவரான அல்மாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது குறித்து இப்போது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டரீதியிலான வழியில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவியான அலியா அசாதி, ஹிஜாப் அணிவது தனது அரசியலமைப்பு உரிமை என்றும் அதை யாராலும் பறிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்