Aran Sei

காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டர் : உடல்களை குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் அரசு – மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

கடந்த டிசம்பர் 30-ம் தேதி (2020), ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் மூன்று இளைஞர்கள் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டவர்கள் இரண்டு பேருக்கு போராளி குழுக்களுடன் தொடர்பிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால், மரணமடைந்த இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாணவர்கள் என்றும் யாரும் போராளிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பெல்லட் குண்டுகளும், காஷ்மீர் இளைஞர்களின் இருண்டு போன வாழ்க்கையும்

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி போராளிகள் என குற்றம்சட்டப்பட்டு காவல்துறை நடத்திய என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் இறுதி மரியாதை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எதிர் கட்சிகளின் பாதுகாப்பைக் குறைக்கிறதா காஷ்மீர் நிர்வாகம் ? : மெஹபூபா முப்தி கேள்வி

அந்தக் கடிதத்தில் “குடும்ப உறுப்பினர்களின் விருப்பபடி, அவர்களின் (என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள்) கடைசி மரியாதை செய்யப்படுவதை நீங்கள் (துணை நிலை ஆளுநர்) தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். இந்த என்கவுண்டரைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையின் அறிக்கையும் ராணுவத்தின் அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்தால்தான் நீதி கிடைக்கும், இந்தச் சம்பவத்தில் பக்கசார்பின்றி விசாரணையை நடத்த வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் : `நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தொடர் மின்வெட்டுகள்’

இந்த சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருப்பதை கடிதத்தில் சுட்டிகாட்டிய முஃப்தி “இந்த கடுமையான முடிவு அவர்களின் இழப்பு மற்றும் வேதனையை அதிகரிக்கும். இந்த முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்து இந்தச் சம்பவத்திற்கு ஒரு முடிவை தர வேண்டும். தனது மகனின் திடீர் மற்றும் துயரமான மரணத்திற்கு வருத்தப்படுகிற ஒரு தாய், அவனது முகத்தைப் பார்க்கும் கடைசி வாய்ப்பை இழக்கக்கூடாது.

அவருடைய உடலை பெறுவதற்காக தாயை பிச்சை எடுக்க வைக்கக்கூடாது. இது மனிதாபிமானமற்றது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மெஹ்பூபா முஃப்தி துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்