கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஏறக்குறைய 3,500 முதல் 4000 மாணவர்கள் வரை பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகளான ஸ்ரீமதி (பன்னிரெண்டாம் வகுப்பு), சந்தோஷ் (ஐந்தாம் வகுப்பு) ஆகியோர் பயின்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஜுலை 13 ஆம் தேதி, பள்ளி விடுதியில் தங்கியிருந்த ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாணவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை கடிதமும் கடந்த 18-7-22 அன்று வெளியானது.
இந்த மர்ம மரணம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறை பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் விசாரித்து வருவதாக கூறியது. ஸ்ரீமதியின் மரணத்தால் ஆத்திரமடைந்த குடும்ப உறுப்பினர்கள், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர் இருப்பினும் உரிய பதில் எதுவும் அளிக்கப்படாமல் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் நுழைவாயிலிலேயே மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் அழும் காட்சிகள் வெளியாகின.
இந்த சூழலில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் தங்களிடம் ஏதோ ஒரு மர்மத்தை மூடிமறைப்பதாகவும் மாணவியின் தாயார் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த காணொளியில் பேசிய மாணவியின் தாயார், தன்னுடைய சந்தேகத்திற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருந்தார். அதில் மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் காலை 6.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் ஆனால், அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றும் மாணவியின் உயிரற்ற உடலை மட்டும் தான் பார்க்க முடிந்தது எனவும் கூறியுள்ளார். தன் மகளின் உடலில் தலை மற்றும் முகத்தை தவிர வேறு இடங்களில் காயம் இல்லை என கூறிய அவர், மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது உண்மை என்றால் மாடியில் இருந்து கீழே விழுந்ததற்கான எந்த சுவடுகளும் தன் மகளின் உடலில் இல்லாததற்கான காரணம் என்ன என்பதையும் கேள்வியாக எழுப்பியுள்ளார். மேலும், அதிகார வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பள்ளி நிர்வாகம், தன் மகளின் மரணம் தொடர்பான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் அவர்கள் சொல்லும் தகவல்கள் நம்பதகுந்ததாக இல்லை என்றும் குற்றம் சுமத்தினார். அது மட்டுமின்றி அந்த பள்ளியில் ஏற்கனவே 7 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்கள் என பகிரங்கமான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அந்த காணொளியின் முடிவில் தனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படாமல் இருக்க, அந்த பள்ளியை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மரணமடைந்த மாணவி ஸ்ரீமதி ஆறாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னணி ஊடகங்களாலும், பத்திரிகைகளாலும் பெட்டி செய்தியாக கடந்து போன ஸ்ரீமதியின் மரணம், மாணவியுடைய தாயாரின் காணொளிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு நீதி கோரும் வகையில் #JUSTICEFORSRIMATHI எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகியது. யூட்யூபில் அதிக சப்ஸ்கரைபர்களை கொண்டுள்ள யூட்யூபர்களான மதன் கெளரி, டிடிஎஃப் வாசன் போன்ற நபர்களும் மாணவியின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை சுட்டிக்காட்டி வீடியோக்கள் வெளியிட்டனர்.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் வெளியான கருத்துக்களையும், மாணவியின் தாயாரின் கருத்தையும் முற்றிலுமாக நிராகரித்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், காவல்துறை விசாரணைக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும், பள்ளி தொடர்பாக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
சமூகவலைதளங்களில் பலர் குரல் கொடுத்து கொண்டிருந்த சுழலில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கனியாமூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், ஐந்தாம் நாள் (17-7-22) நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (17—7-22) கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் 200 காவலர்கள் மட்டுமே போராட்டத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட தொடங்கினர், அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் பள்ளிக்குள் நுழைந்து பள்ளியை கைப்பற்றினர். அடுத்த சில மணி நேரங்களுக்குள் மொத்தப்பள்ளியும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அந்த பள்ளியின் நுழைவாயில் சேதப்படுத்தட்ப்பட்டது, பள்ளியின் முன் நிறுத்தின் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன, வகுப்பறைகள், அலுவலக அறைகள், பள்ளியின் கண்ணாடி கதவுகள் சேதப்படுத்தப்பட்டன. பள்ளிக்குள் காலை 9.30 மணியளவில் நுழைந்த போராட்டக்காரர்களை விரட்டியடித்து மாலை 3.00 மணியளவில் பள்ளியை, காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இந்த சம்பவத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் என இருவர் தரப்பில் பலரும் காயமடைந்தனர். இதைதொடர்ந்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என கோரிக்கை விடுத்தார்.
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். (1/2)
— M.K.Stalin (@mkstalin) July 17, 2022
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”மாணவி உயிரிழந்த பிறகு பதற்றமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தும், அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகிகள் கைதை முன்கூட்டியே செய்திருந்தால், இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம்” என தெரிவித்தார்.
மாணவி உயிரிழந்த பிறகு பதற்றமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தும், அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகிகள் கைதை முன்கூட்டியே செய்திருந்தால், இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம் –
மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்.— AIADMK (@AIADMKOfficial) July 18, 2022
இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார், உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார். மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.
என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?
ஆளும் @arivalayam அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார், (1/3)
— K.Annamalai (@annamalai_k) July 17, 2022
இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் பதற்றத்தையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கலவரம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மாணவியின் மர்ம மரணம் மற்றும் விடுதியின் போதிய பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை கைது செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் சட்டவிரோதமாக கூடியது, பொதுசொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட 70 பேரை கைது செய்திருப்பதாகவும் கூறினார். இதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 128 இளைஞர்களும், 20 சிறார்களும் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமின்றி, இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அதை கண்காணிக்க, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார். இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவியின் தந்தை அவர் வழக்கறிஞருடன் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற ஸ்ரீமதியின் தந்தை கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவக் குழுவே ஸ்ரீமதியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் நடைபெற இருக்கக்கூடிய மறு உடற்கூறாய்விற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வு முன்பு மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதே நேரத்தில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவால் நடைபெறவுள்ள மறு பிரேத பரிசோதனைக்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி, கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டறிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. மேலும், அந்த பள்ளியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஷாகா வகுப்புகள் தொடர்பான செய்திகளும், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுடன் இணைந்து எடுத்திருக்கும் புகைபடங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் திமுக அரசை சீர்குலைக்க பாஜக ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு நடத்திய கலவரம் என திமுக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சக்தி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கடந்த 2003, 2004, 2005, 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில், அந்த பள்ளியின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது ஏன் என்கிற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர். மேலும், கலவரம் நடந்ததை கணிக்க தவறியதாலும், கட்டுப்படுத்த தவறியதாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எஸ்பியும் மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுரையாளர்: தேவா பாஸ்கர்
Kallakurichi Sakthi School ல எப்படிடா ஆணுறை வந்தது ! Pasumpon Pandian | Srimathi Issue | Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.