எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது இலங்கை கடற்படை செய்துள்ளது.
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் சேவா பாரதி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(60), சிவபாரதி(27), சவுந்தர்ராஜன்(34 ), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த செல்வநாதன் (29), ரத்தினசாமி(34), சந்திரபாடியைச் சேர்ந்தஅய்யப்பன் (40), முருகேசன்(55) ஆகிய 9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தின மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கில் இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 9 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இதேபோல, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் வீரமணி(35), அதே பகுதியைச் சேர்ந்த செல்வமணி(45), ரமேஷ்(34), திலீபன்(16), சுரேஷ்(34), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி(58), கிஷோர்(20), கோகுல்(21), நிலவரசன்(23), சத்தியநாதன்(22), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார்(27), பால்மணி(32), கவியரசன்(24) ஆகிய 13 பேர் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்டபகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.