Aran Sei

“ஆறு பாலும் யாக்கரா?” – ஏற்காடு எக்ஸ்பிரஸ் தங்கராசன் நடராஜன்

இந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தங்கராசன் நடராஜன் 20 யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச விளையாட்டு வீரர்களால் பாராட்டுப் பெற்றிருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலமே அதன் பந்து வீச்சாளர்கள்தான். புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் போன்ற உலக அரங்கில் பெயர் பெற்ற பவுலர்களுடன் இணைந்து விளையாடும் நடராஜன் தன் அபாரமான திறனை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.இவர் விரைவில் இந்திய கிரிகெட் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென கிரிகெட் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கிராமப்பகுதியிலிருந்து எழுந்து வந்திருக்கும் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரரை வரவேற்பதும், கொண்டாடுவதும் நம் கடமை. சேலம் அருகே 35 கி.மீ தொலைவில் உள்ள சின்னப்பம்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். அப்பா நெசவாளி, அம்மா சாலையோரத்தில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். 3 சகோதரிகளும், 1 சகோதரரும் உள்ள இக்குடும்பத்தின் தலைமகன் இவர்தான்.

சின்னப்பம்பட்டியில் அரசுப்பள்ளியில் படித்த நடராஜனுக்கு தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே கிரிகெட் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. இயல்பாகவே குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது எழும் ஆர்வம்தான் அது. பெரிய விதிமுறைகள், மைதானங்கள் எதுவும் இல்லாமல் டென்னிஸ் பந்தில் கிரிகெட் விளையாடிப் பழகியுள்ளார். தற்போது தான் யார்க்கர் பந்துகளை நேர்த்தியாக வீசுவதற்கு டென்னிஸ் பந்தில் விளையாடப் பழகியதுதான் காரணம் எனக் கூறியிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரை கிரிகெட் தலையாய விளையாட்டு. மக்கள் உணர்வோடு ஒன்றிப்போன விளையாட்டும் கூட. வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளை கிரிகெட்டுக்கென கோச்சிங் அனுப்பி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்துவர். நடராஜன் போல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவருக்கு அப்படியான வாய்ப்புகள் ஏதும் இல்லை. தன் பெற்றோர்க்கு கிரிகெட் பற்றி எதுவுமே தெரியாது என்று நடராஜன் கூறியிருக்கிறார். இப்படியான சூழலில் இருந்து ஒரு விளையாட்டு வீரர் உருவாக வேண்டுமென்றால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நடராஜன் முன் இருந்த பெரும் சவால் கிரிகெட் விளையாடுவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட அல்லாட வேண்டிய குடும்ப பொருளாதார நிலை. விளையாட்டு வீரருக்கு மிகவும் முக்கியமானது ஷூ. டோரமெண்டுகள் விளையாடும்போது எந்த அணிக்காக விளையாடுகிறாரோ அவர்களே ஷூ வாங்கித் தருவர். அதை வைத்து ஓராண்டு காலத்தை நகர்த்தியிருக்கிறார். எந்த வெற்றியாளருக்குப் பின்பும் அவரது திறமையைக் கண்டுணர்ந்து தன்னால் இயன்ற உதவிகள் மூலம் ஊக்கப்படுத்துகிறவர் இருப்பார். அப்படியாக தனக்கு ஜெகதீஷ் என்கிற உடன்பிறவா சகோதரர் இருந்தார் என்று நடராஜன் குறிப்பிடுகிறார்.

அண்டர் 19, அண்டர் 23 எதுவும் விளையாடாமலேயே 2014ம் ஆண்டு நேரடியாக ரஞ்சிக்கோப்பைக்குத் தேர்வாகிறார் நடராஜன். சில காரணங்களால் அப்போட்டியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார். பெருங்கனவொன்று தகர்ந்து விட்டதில் நொறுங்கிப் போன அவருக்கு தமிழ்நாடு ப்ரீமியம் லீக் போட்டிகள் மூலம் ஓர் நம்பிக்கை கிடைக்கிறது. அத்தொடரில் ஒரு ஓவர் முழுவதும் யார்க்கர் பந்துகளை வீசி பெரிய அளவில் கவனம் பெறுகிறார்.

ஸ்டெம்பை குறிபார்த்து வீசப்படும் பந்துகளை யார்க்கர் எனக்குறிப்பிடுகின்றனர். யார்க்கர் பந்து வீசுவது அவ்வளவு எளிதானதல்ல. சர்வதேச வீரர்களுக்கே மிகவும் சவாலானது. இரண்டு inch முன்னே விழுந்தால் overpitch delivery ஆகிவிடும், அதுவே இரண்டு inch தள்ளிப் போனால் full toss ஆகிவிடும். இப்படியான சவால்மிக்க பந்து வீச்சை அபாரமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நடராஜன். இதுவரை நடைபெற்றுள்ள 5 மேட்சுகளில் 20 யார்க்கர் பந்துகளை வீசி அப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

சர்வதேச வீரர்கள் பலர் நடராஜனை பாராட்டியுள்ளனர். தமிழ்நாடு ப்ரீமியம் லீக், ஐபிஎல்-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் நடராஜன் விளையாடியிருக்கிறார். தற்போதைய தொடரில்தான் பெரும் கவனத்துக்கு ஆளாகியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். மட்டுமின்றி இத்தொடரில் வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர்களும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிட வேண்டியது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்