Aran Sei

வீறு கொண்டு எழுமா பெங்களூர் அணி – மும்பையை வீழ்த்தி வெற்றி

பிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 12 சீசன்களிலும் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலிதான் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வெல்வது அவரது நெடுங்காலக் கனவாக இருக்கிறது. இரண்டு முறை இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது. இச்சூழலில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் தனது நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது பெங்களூர் அணி.

செப் 28-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி வென்றதன் மூலம் தனது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையிலான போட்டி சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் விராட் கோலி வெறும் 5 ரன்களில் அவுட் ஆனாலும் மற்ற வீரார்களான தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 50க்கும் மேல் ரன்கள் குவித்து 201 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குவண்டின் டி காக் போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் இஷான் கிஷன் மற்றும் பொல்லார்டு கூட்டணி அதிக ரன்களை சேர்த்தது. இஷான் கிஷன் 99 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மும்பை அணியும் 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.

சூப்பர் ஓவரில் மும்பை அணி 7 எடுக்க 8 என்கிற இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. இந்த வெற்றி பெருமை கொள்ளத்தக்கதாக இருந்ததென விராட் கோலி மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்தார்.

விராட் கோலி இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களிலும் 14, 1, 5 என சொற்ப அளவிலான ரன்களே எடுத்துள்ளார்.

”கிரிகெட் வீரர்களைப் பொறுத்த வரை ஒன்றிரண்டு போட்டிகளை வைத்தெல்லாம் ஃபார்ம் அவுட் ஆகி விட்டார் என சொல்லி விட முடியாது. கோலி நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த ஆறு மாத காலம் எல்லோருக்கும் நெருக்கடியான காலம்தான். அதில் அவர் பயிற்சி எடுக்காமல் இருந்திருக்கலாம். கோலியின் அபாரமான பங்களிப்பு இல்லாமலேயே இந்த இரண்டு வெற்றிகளும் சாத்தியப்பட்டிருக்கின்றன என்றால் அந்த அணி வலுவாக உள்ளது என்றுதான் அர்த்தம்” என்கிறார் கிரிகெட் விமர்சகர் பட்டாபி.

மேலும், “டிவில்லியர்ஸ், ஃபிஞ்ச், படிக்கல் போன்ற பேட்ஸ்மேன்களும் வாஷிங்டன் சுந்தர், சைனி போன்ற பந்து வீச்சாளர்களும் அபாரமான பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். இவர்களோடு கோலியின் அபாரமான பேட்டிங்கும் சேரும்போது நிச்சயம் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் வாய்ப்புள்ளது. தொடக்க நிலையில் எதையும் முடிவு செய்ய முடியாது என்றாலும் பெங்களூர் அணியை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் வெற்றிகள் இருக்கின்றன” என்கிறார் பட்டாபி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்