Aran Sei

ராஜஸ்தான் அணியின் நல்ல தொடக்கம் – கோப்பை கனவு சாத்தியப்படுமா?  

செப் 27ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கில் அதிக ரன்களை எடுத்த அணி என்கிற சாதனையை ராஜஸ்தான் அணி நிகழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்பு செப் 22-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 216 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது ராஜஸ்தான்.

ஐபிஎல் கோப்பையை முதன் முதலில் வென்ற அணி ராஜஸ்தான். அதன் பிறகு எந்த இறுதிப் போட்டியிலும் ராஜஸ்தான் அணி வெல்லவில்லை. இந்நிலையில், இந்த சீசனில் அந்த அணி முதல் இரண்டு ஆட்டங்களிலும் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் இந்த நல்ல தொடக்கம் பற்றி கிரிகெட் வர்ணனையாளர் விக்னேஷ், “ராஜஸ்தான் அணி சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுடனும் ஷார்ஜா மைதானத்தில் மோதியது. ஷார்ஜா மைதானம் பழமையானது என்பதோடு குறுகிய மைதானம். பொதுவாகவே மைதானங்களில் சராசரியாக 80 மீட்டர் தொலைவில் பவுண்டரி லைன் இருக்கும். இது போன்ற குறுகிய மைதானங்களில் 60 – 65 மீட்டர் தொலைவிலேயே பவுண்டரி லைன் இருக்கும் என்பதால் எளிதாக ஃபோர், சிக்ஸ் அடிக்க இயலும். ஆகவே மற்ற மைதானங்களோடு ஒப்பிடுகையில் இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சுலபமானது. ராஜஸ்தானை எதிர்த்து ஆடிய சென்னை அணி 200 ரன்களும், பஞ்சாப் அணி 223 ரன்களும் எடுத்திருந்ததை வைத்து இதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்கிறார்.

ராஜஸ்தான் அணியின் பலமாக எதனைக் கருதலாம் என்றதற்கு, “ராஜஸ்தான் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் தீவாட்டியா போன்ற வீரர்கள் பெரும் நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். U19 போட்டிகளில் திறம்பட விளையாடியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வீரர்கள் தேர்வை பலமாகப் பார்க்கலாம்” என்கிறார்.

மேலும், “ராஜஸ்தான் அணிக்கு இந்த இரண்டு ஆட்டங்களும் நல்லதொரு தொடக்கம்தான். ஆனால், இதைக்கொண்டு மட்டும் வெற்றி வாய்ப்பைத் தீர்மானித்து விட முடியாது. இன்னும் பல போட்டிகள் உள்ள நிலையில் சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறும். மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் தோற்றாலும் இறுதிக்கட்டங்களில் வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு வரும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் பலமாக உள்ளது. அவர்கள்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். சென்னை அணியில் காயத்தின் காரணமாக ஓய்விலிருக்கும் அம்பத்தி ராயுடு, ப்ராவோ  ஆகியோர் வந்த பிறகு அணி பலம் பெற்று விடும். எனவே ராஜஸ்தான் அணி இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது” என்கிறார் விக்னேஷ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் தீவாட்டியா வெற்றிக்கு பெரும்பங்களிப்பு அளித்திருந்தார். சக ஐபிஎல் வீரர்கள் தொடங்கி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்