Aran Sei

ஹாட்ரிக் தோல்வி – சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் தொடர்ச்சியாகத் தனது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளை நிறைவு செய்திருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை அணி. நான்காவது ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிப்பட்டியலில் உயரலாம் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பு இத்தோல்வி மூலம் தகர்ந்து போனது.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சென்னை அணி மற்ற அணிகளுக்குக் கடுமையான போட்டி அணியாக இருந்து வந்துள்ளது. இச்சூழலில் இத்தொடர் தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் சற்றே ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றன. கோப்பைக் கனவெல்லாம் தகர்ந்து அரையிறுதிக்கு முன்னேறுவோமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இத்தோல்விகளிலிருந்து சென்னை அணி மீட்டுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

“கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக இந்த ஆறு மாத காலங்களில் எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை. ஆகவே பயிற்சி இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தொய்வு இது. சென்னை அணி மட்டுமல்ல பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியிடமிருந்தும் கூட நல்ல ஆட்டம் வெளிப்படவில்லை. சென்னையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அதிகம் இருப்பது பலம் என்றாலும் அதுவே பலவீனமாகவும் இருக்கிறது. இந்தப் பயிற்சியின்மை காரணமாக அவர்கள் துணிந்து இறங்கி ஆடத் தயக்கம் காட்டுவது தெரிகிறது. நேற்று நடந்த போட்டியில் 165 ரன்களை சேஸ் செய்வது இயலாத காரியமல்ல. ஆனால், இவர்களிடம் நம்பிக்கை குறைந்தே காணப்பட்டது.  இந்த நம்பிக்கையின்மைதான் இத்தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறது” என்கிறார் கிரிகெட் வர்ணனையாளர் விக்னேஷ்.

சென்னை அணி அடுத்த ஆட்டத்துக்குத் தன்னை எப்படியாகத் தயார்படுத்திக் கொள்வது? என்றதற்கு, “ரெய்னா போன்ற வீரர் இல்லாதது உண்மையிலும் சென்னை அணிக்கு இழப்புதான். தொடக்க ஆட்டக்காரர்களைத் தெளிவாகத் தேர்வு செய்ய வேண்டும்.  ஏனெனில், கடந்த மூன்று போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்களிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிப்படவில்லை. இதனால் டூ ப்ளஸி மற்றும் தோனி மீதே ஒட்டுமொத்த அழுத்தமும் இறங்கியது. சாம் கர்ரன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். வாட்சனுக்கு ஓய்வு கொடுத்து, சாம் கர்ரனை தொடக்க ஆட்டக்கரராகக் களம் இறக்கலாம். தொடக்க ஆட்டக்காரர்கள் பந்துகளை வீண் செய்யாமல் ஓரளவு ரன்களை எடுத்துக் கொடுத்தால் கூட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதைக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

நின்று நிதானமாக ஆடாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அனைத்துப் பந்துகளிலும் ஃபோர், சிக்ஸ் எடுக்க முடியாதுதான். ஆனால், டாட் பால் ஆகி விடாமல் ஒரு பந்துக்குக் குறைந்தது ஒரு ரன்னாவது எடுக்க முயற்சி செய்ய வேண்டும். வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. டாட் பந்துகளுக்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் சென்னை அணி வென்றிருக்கும்” என்கிறார் விக்னேஷ்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்