Aran Sei

துடிப்புமிக்க வீரர்களால் பலம்பெற்றுள்ள டெல்லி அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இளம் வீரர்களை அதிக அளவில் கொண்டிருக்கும் டெல்லி அணி இத்தொடரின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மட்டும் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப், சென்னை, கொல்கத்தா அணிகளுடனான வெற்றியை அடுத்து தற்போது பெங்களூரு அணியை வென்றதன் மூலம் தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பெரும் நம்பிக்கை தரக்கூடிய அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸின் செயல்பாடுகள் இருக்கின்றன.

“டீம் ஸ்பிரிட்தான் டெல்லி அணியின் மிகப்பெரும் பலமாக இருக்கிறது. சென்னை அணிக்கு தோனி ஐகானாக இருக்கிறார். பெங்களூரு அணிக்கு கோலி ஐகானாக இருக்கிறார். டெல்லி அணிக்கு அப்படி யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணி என்பதால் துள்ளலும் துடிப்புமான ஆட்டம் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.” என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் விக்னேஷ்.

“இதே டெல்லி அணி 2018-ம் ஆண்டு மிக மோசமாக விளையாடியது. அதன் பிறகு அணிக்குள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். ரவிச்சந்திர அஷ்வின் மற்றும் ஷிகர் தவாண் போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே வலுவான வீரர்களைக் கொண்டு களம் கண்டதால்தான் டெல்லி அணியின் இந்த வெற்றி சாத்தியப்பட்டது” என்கிறார்.

“பேட்டிங்கைப் பொறுத்த வரை டாப் ஆர்டர் நன்றாகவே இருக்கிறது. ஷிகர் தவாண் இதுவரை பெரிய ரன்களைக் குவிக்கவில்லையென்றாலும், நல்ல தொடக்கத்தைக் கொடுக்கிறார். ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்கள் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆல் ரவுண்டரான ஸ்டாய்னிஸ் இந்த அணியின் மிகப்பெரும் பலம். நேற்றைய ஆட்டத்தில் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தது ரன் குவிப்புக்கு பெரும் பங்களிப்பாய் இருந்தது.” என்கிறார் விக்னேஷ்.

“பவுலிங்கைப் பொறுத்த வரை வேகப்பந்து வீச்சாளர்களான நோர்க்கியா மற்றும் ரபாடா இருவரும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். அதே போல் சுழற்பந்து வீச்சில் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோரின் கூட்டணி நன்றாக அமைந்துள்ளது.” என்கிறார்.

மேலும், இந்திய இளம் பேட்ஸ்மேன்கள், ஹெட்மயர் போன்ற ஆல்ரவுண்டர்கள், ஸ்டாய்னிஸ் போன்ற ஹார்ட் ஹிட்டிங் ஆல்ரவுண்டர், சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைத்துத் தளங்களிலும் திறமையான பங்களிப்பை செலுத்தும் வீரர்களைக் கொண்டிருப்பதுதான் டெல்லி அணியின் பலம். டி20 ஐ பொறுத்தவரை திறமையான ஒரு பேட்ஸ்மேன் கூட அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்ல முடியும். பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 132 ரன்களைக் குவித்தார். எல்லா நேரங்களிலும் இது வேலை செய்யாது. தனி நபர் திறன் மட்டும் வெற்றியை சாத்தியப்படுத்தாது என்பதற்கு டெல்லி அணி நல்லுதாரணம்.” என்கிறார் விக்னேஷ்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்