Aran Sei

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி – ரசிகர்கள் மகிழ்ச்சி

Credit: https://www.financialexpress.com

ழைய எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும். எந்த எதிர்ப்பும் காட்டாமல் வில்லனிடம் அவர் வரிசையாக அடி வாங்கிக் கொண்டிருப்பார். அதைப்பார்க்கும் ரசிகர்கள் பதைபதைத்துப் போவார்கள். அழக்கூட செய்வார்கள். மூன்று அடிகள் வாங்கிய பிறகு நான்காவது அடிக்காக கை ஓங்கும்போது அதனைத் தடுத்து எம்.ஜி.அர் பதிலடி கொடுப்பார். கலங்கிப்போன ரசிகர்கள் உற்சாகம் பொங்க கைதட்டுவார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார வெற்றியும் அப்படி ஒரு பதிலடிதான். அதுவும் ஐபிஎல் கிரிகெட் வரலாற்றிலேயே 0 விக்கெட் இழப்பில் சேஸ் செய்து வெற்றிபெற்ற அணி என்கிற சாதனையைப் படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியைப் பொறுத்தவரை வாட்சனும், டூப்ளெசியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கி வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். தோனி – ரெய்னா போல சென்னை ரசிகர்கள் மிகவும் விரும்பும் காம்போ வாட்சன் – டூப்ள்சி.

முதல் நான்கு போட்டிகளில் குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத வாட்சன் பஞ்சாப் அணிக்கு எதிரான 5 வது ஆட்டத்தில் டூப்ளெசியுடன் பார்ட்னர்ஷிப் போட்டு விளாசித் தள்ளுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. வாட்சனின் அபாரமான தன்னம்பிக்கையைக் கண்டு கிரிகெட் ரசிகர்கள் புல்லரிக்கும்படியாக வாட்சனின் ட்வீட் இருந்தது.

பஞ்சாப் அணியுடன் மோதுவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘ஒரு சிறப்பான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்தவிருக்கிறது’ என்று ட்வீட் செய்திருந்தார். அடுத்த நாள் ஆட்டத்தில் மட்டும் சரியாக ஆடாமல் போயிருந்தாரென்றால் சமூக வலைதளங்களில் அந்த ட்வீட்டை வைத்தே கலாய்த்துத் தள்ளியிருப்பார்கள். வாட்சன் 83 ரன்கள் எடுத்து ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் டைட்டிலை வென்றார். அப்போட்டி பஞ்சாப்புக்கும் சென்னைக்குமான போட்டியாக இல்லாமல் வாட்சனுக்கும் டூப்ளெசிக்குமான போட்டியாக இருந்தது. ஆட்டத்தின் கடைசிப்பந்துக்கு முன்பு வரை இருவரது தலா 83 ரன்கள் இருந்த நிலையில் டூப்ளெசி ஃபோர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது சென்னை அணி. ‘எடுடா மேளம்… அடிடா தாளம்… இனிதான் கச்சேரி ஆரம்பம்’ என குதியாட்டம் போட்ட சென்னை ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஏமாற்றமே மிஞ்சியது. ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளுடனான போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்தது. “என்ன இன்னைக்கு டொக்காயிட்டீங்களா” என்கிற ஆரண்ய காண்டம் பட வசனம் போல மற்ற அணி ஆதரவாளர்கள் சென்னை அணியை வகையாக வைத்து செய்தார்கள்.

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக ‘காய்ப்பட்ட சிங்கம்’ என்கிற அடைமொழியோடு சுற்றித்திரிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அப்பட்டத்தை சென்னைக்குக் கொடுத்து விட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்குப் போய் அமர்ந்தது. அப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடமான 8-வது இடத்தில் இருந்தது. என்ன லிஸ்டு தலைகீழா இருக்கு என சென்னை ரசிகர்கள் நொந்து கொண்டிருந்த சூழலில் வாட்சன் – டூப்ளெசி கூட்டணி பஞ்சாப் அணியைப் பந்தாடியதில் சென்னை பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த சென்னை அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பைக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்ததன் மூலம் 5-வது இடத்திலிருந்து ராஜஸ்தான் அணி 7-வது இடத்துக்குச் செல்ல சென்னை 5-க்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணியை பின்னுக்குத் தள்ளி விட்டு சென்னை அணி மூன்றாவது இடத்துக்குப் போகும்.

இது கொலையில்லடா வதம் என இனி ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணி துவம்சம் செய்யும் என்கிற ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் சென்று சொகுசாக அமர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

இத்தனை ஆண்டுகால ஐபிஎல் தொடரில் எத்தனையோ அணிகள் களம் கண்டிருக்கின்றன. ஆனால், ரசிகர்கள் மத்தியில் சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையேதான் வலுவான போட்டி நிலவுகிறது. இரண்டு அணிகளும் தலா 3 முறை கோப்பை வென்றிருந்த நிலையில் சென்ற ஆண்டு 1 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது சென்னை அணி. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெல்வதன் மூலம் 4 முறை கோப்பை வென்ற அணி என்கிற மும்பையின் சாதனையை சமன் செய்ய முடியும் என்பதே ரசிர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. “ரேஸ்ல நாங்களும்தான் இருக்கோம்” என டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு அணிகளும் சமர் செய்து வருகின்றன.

கடந்த ஆட்டத்தில் பெரும் நம்பிக்கையை விதைத்த சென்னை அணி அதனைத் தொடர்ந்து தக்க வைக்குமா? என்கிற கேள்வியோடும், வைக்கும் என்கிற நம்பிக்கையோடும் ‘அல்லையில் குத்து’ ‘மல்லாக்கப் போடு’ என்றபடியே மேட்ச் பார்க்க அமர்கிறான் #yelloveகாரன்.

– கி.ச.திலீபன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்