Aran Sei

’ஏலேய் சண்முகம்.. எட்றா வண்டிய’ – நாட்டாமை தாஹிர் தடாலடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடக்கம் தர்ம அடியாகவே விழுந்துள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கடவாயில் வைத்துக்கொண்டு குதூகலமாக மைதானத்தில் குதித்த சென்னையை, ராஜஸ்தான் அணியும் தில்லி அணியும் கும்மாங்குத்து குத்தி துரத்திவிட்டது.

இது போதாதென்று வெந்த புண்ணில் வெங்காய ஆம்ப்ளேட் போட்டது போல, புள்ளி பட்டியலில் சென்னை கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த துக்கத்தில் தூக்கத்தை தொலைத்து விட்ட சென்னை ரசிகர்கள் ”ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா” என்று இதயம் முரளி மோடுக்கு மாறி திரிவதாக நாசாவின் ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது.

’அண்ணே எப்ப போவான் திண்ண எப்ப காலி ஆகும்’ என்று காத்திருந்த மற்ற அணி ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக், வாட்சப், ஆஃப்பிஸ், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், டோலக்பூர், பொச்சுகினி என்று கிடைத்த இடத்தில் எல்லாம் சென்னை அணியை ஊறவைத்து, துவைத்து, ஊறவைத்து, துவைத்து துவைத்து ஊறவைத்து அடி காயப்போட்டு, க்ளிப் மாட்டி விடுகிறார்கள்.

நன்றி : New Indian Express

பஞ்சாப், ஹைதராபாத் ரசிகர்களின் அடியை தாங்கிக்கொண்டாலும், டீக்குடிக்க கூட ’கப்’ இல்லாமல் ‘ஏ சாலா கப் நம்தே’ என்று மந்திரம் ஓதிக்கொண்டு சுற்றும் பெங்களூரு அணி ரசிகர்ளும் சேர்ந்துக்கொண்டு, சென்னையை செய்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சென்னை அணியின் வீரர்களுக்கும் கவலையை அளித்துள்ளது.

இந்தக் கொடுமையை கண்டு தட்டிக்கேட்க எழுந்த சென்னை அணி ரசிகர் ஒருவர், ”2010 ஐபிஎல் தொடரில் 7 ஆட்டங்கள் முடிந்த நிலையில் 2-ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. சென்னைக்கு வாய்ப்பே இல்லை எனப் பலர் எழுதினாலும் அடுத்த 7 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கடைசியில் தனது முதல் கோப்பையை வென்றது. நிரூபித்துக் காட்டியவர்களை என்றும் சாடாதீர்கள். இந்த புள்ளி பட்டியல் விரைவில் மாறும்” என்று ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.

சென்னை அணியின் முழுநேர ஓட்டப் பந்தய வீரரும் பார்ட் டைம் பவுலருமான இம்ரான் தாஹிர் இந்த ட்விட்டை பார்த்து, துள்ளி எழுந்து ரீ-ட்விட் செய்துள்ளார். அதில் “சார், ஒரு சிலர் அவங்களை வெச்சு முடியாதுன்னு சொல்றாங்க. நாங்க எங்களை வெச்சு முடியும்னு சொல்றோம். முடியாதுன்னு சொல்றத முடிச்சு காட்டுறதுதான் எங்க பழக்கம். எட்றா வண்டிய, போட்றா விசில” என்று ஹர்பஜனின் புகழ் தமிழ் மொழியில் ஆங்கில எழுத்துக்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை பார்த்த சென்னை ரசிகளுக்கு பெரிய அளவில் சந்தோஷம் இல்லை என்றாலும், ஹீராவோட வீடியோ கால் பேசிய இதயம் முரளியின் சந்தோஷத்தில் பாதியையாவது கொடுத்திருக்கிறது. அதே நேரம் ’குழாய் அடில உருண்டு என்ன பிரயோஜனம்? கோயில் அடில போய் உருளு’ என சில சென்னை ரசிகர்களே சொல்லியிருப்பதை பார்க்கும் பொழுது, வெங்காய ஆம்ப்ளேட்டின் வலியை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்று தெரிகிறது.

வரும் வெள்ளி அன்று ஹைதராபாத்துடன் மோதுகிறது சென்னை. ‘வெள்ளி கெடச்சாலும் வெள்ரிக்கா கெடைக்காது’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் ‘ப்ளானிங்’டன் செயல்பட்டால், வெள்ளரிக்காவை மட்டுமல்ல வெற்றியையும் சேர்த்து சாப்பிட முடியும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்