Aran Sei

கேப்டன் தோனிக்கு இது அழகா? – கவுதம் கம்பீர் தாக்கு

செப்டம்பர் 22-ம் தேதி ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 217 ரன்கள் இலக்கோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. கடும் போராட்டத்துக்குப் பிறகு ஆட்ட முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில், அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 7 வது ஆளாக களமிறங்கியது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் காம்பிர் “ஒரு கேப்டனாக தோனிக்கு இது அழகல்ல” என்று விமர்சித்திருக்கிறார்.

“தோனிதான் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும் என்கிற சூழலில்  கெய்க்வாட் மற்றும் சாம் கரனை முன்வரிசையில் அனுப்பிவிட்டு, தோனி ஏழாவது இடத்தில் களமிறங்குவது அர்த்தமற்றது. 217 ரன்கள் சேஸிங் செய்யும்போது, அவர் ஏழாவது இடத்தில் இறங்குவதற்கு பெயர் அணியை முன் நின்று வழிநடத்துவதல்ல. டு பிளஸிஸ்  தனி ஆளாக நின்று போராடினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தோனி மூன்று சிக்ஸர் அடித்ததில் அணிக்கு எந்த பயனும் இல்லை. ரெய்னா இல்லாத சூழலில் கெய்க்வாட், டு பிளஸிஸ், முரளி விஜய், கேதர் ஜாதவ் ஆகியோர் தோனியை விட சிறந்த வீரர்கள் என மக்கள் நினைக்கும்படியாக அவரது நடவடிக்கை இருக்கிறது” என கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் தோனி. வெல்வதற்கான சாத்தியங்களே இல்லாத போதும் கூட தோனி களத்தில் இருக்கும்போது கடைசி பந்து வரையிலும் எதிர்பார்ப்பு இருக்கும். கடைசி ஓவரில் கூட ஆட்டத்தின் விதியை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தோனிக்கு இருப்பதாக அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இது குறித்து அரண்செய் –யிடம் பேசிய கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் “தோனி 7-வது நபராய் களமிறங்கியதில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் அதன் இறுதிக்கட்டம் மிக முக்கியமானது. வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய இடமே அதுதான் என்பதால் தோனி அக்கட்டத்தில் களத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறார். கேப்டனாக அவரது முடிவு சரியானது. மும்பைக்கு எதிரான போட்டியிலும் அவர் இறுதியில்தான் களமிறங்கினார். அப்போட்டியில் சென்னை அணி வென்றதால் அது விமர்சனத்துக்கு ஆளாகவில்லை அவ்வளவுதான். மேலும், அம்பத்தி ராயுடு காயம் காரணமாக போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அது அணிக்கு பெரும் இழப்பு என்று சொல்லலாம். மற்றபடி, 216 ரன்களை சேஸ் செய்வது மிகக்கடினமானதுதான். அதற்கு தோனி இறுதியில் களமிறங்கியதைக் காரணமாகச் சொல்ல முடியாது” என்று கூறினார்.

தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள தோனி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே தான் இறுதியில் களமிறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்