Aran Sei

’மகிழ்மதியே உயிர்கொள்’ – சென்னை ரசிகர்கள் வேண்டுதல்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி களம் இறங்கியது. முதல் போட்டியில் ’தத்தி தத்தி’ வெற்றிப்பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் ’தட்டி தட்டியே’ தோல்வியுற்றது. சென்னை அணியின் மொத்த வீரர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் பார்ப்போம்.

ஓப்பனிங்

பல ஆண்டுகளுக்கு முன்பு சரியாக சொல்வதானால், காமராஜர் ஆட்சி காலத்தில் ஃபார்மில் இருந்த முரளி விஜயும் வாட்சனும் சேர்ந்து சென்னையின் ஓப்பனிங் பார்த்துக்கொள்கிறார்கள். மேட்ச் தொடங்குவதற்கு முன்பே க்ரீஸை சுத்தம் செய்துவிட்டாலும், தங்கள் பங்கிற்கு பவர் ப்ளே ஓவர் முழுவதும் மைதானத்தை பேட்டால் தட்டி தட்டியே சுத்தம் செய்கிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் இது போன்ற சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிர் அணி பவுலர்களிடமும், ஐநா மற்றும் துபாய் சுகாதார துறை அதிகாரிகளிடமும் நற்பெயரை பெற்றாலும், சென்னை அணி ரசிகர்களை இது கடுப்பேத்துகிறது.

வாட்சன் சென்ற ஐபிஎல் சீசனிலேயே ‘முன்ன பின்ன’ என்று தான் செயல்பட்டார். இந்த தொடரில் சோபிப்பார் என்ற நம்பிக்கையிலே தோனி இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவர் இப்படி சோதிப்பார் என்று முரளி விஜய்யே நினைத்திருக்க மாட்டார். மற்ற அணிகளை போல ஓப்பனிங்கில் புதிய இளசுகளை களமிறக்கலாம். ஏனென்றால், சுகாதாரம் எவ்வளவு முக்கியமே அதே அளவு ஸ்கோரும் முக்கியம்.

மிடில் ஆர்டர்

வாங்கிய சம்பளத்திற்கு மனசாட்சியோடு வேலை பார்ப்பவர் டூப்ளஸிஸ் மட்டுமே. முதல் போட்டியில் அம்பத்தி ராயுடு அம்பது ரன்களுக்கு மேல் அடிக்க ஒரு கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. எந்த ‘சுகாதார பிரியரின்’ கண்பட்டதோ, அவர் காயம் பட்டு போய்விட்டார். அடுத்ததாக ஜடஜா, தல தோனி இறங்குகிறார்கள். இவர்கள் பெரிதாக சோபிக்காததால், மேட்ச் பார்த்த படி சோபாவிலேயே தூங்கி விடுகிறார்கள் சென்னை ரசிகர்கள். கேதர் ஜாதவ்வும், சாம் குரானும் கொஞ்சோண்டு நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

தல தோனி

மேட்ச்சே முடிந்து அனைவரும் வீட்டிற்கு போய், இட்லியும் காரச்சட்ணியும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விட்டாலும், ’எங்க தல தோனி இருக்கார்டா. கண்டிப்பா வின்னிங் ஷார்ட் அடிப்பார்டா’ என்று 21-வது ஓவருக்காக காலி ஸ்டேடியம்மில் காத்திருப்பார்கள் தோனி ரசிகர்கள். அப்படிப்பட்ட தோனி ரசிகர்களுக்கு ஏமாற்றங்களை கொடுத்து வருகிறார் தல. ’அவரை சொல்லியும் குற்றமில்லை. ஏழாவதாக இறங்கி, எந்த ஆணியை கழட்ட முடியும்?’ என்று அவரின் ரசிகர் தங்களை தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள். பழைய பார்முக்கு தல வந்தால் தான், சென்னையை கரை சேர்க்க முடியும்.

நன்றி : theeconomictimes.com

ஸ்பின்னிங்

எல்லா டீமிலும் உள்ள ஸ்பின்னர்கள் எக்கானமியை நன்றாக மெயிண்ட்டைன் செய்திறார்கள். ஆனால் சென்னையின் ஸ்பின்னர்களின் எக்கானமி இந்திய எக்கானமியை போல வெந்தும் வேகாத நூடுல்சாக இருக்கிறது.  ஒவ்வொரு ஸ்பின்னர்களும் ரஜினி பட க்ளைமேக்ஸ் போல ரன்களை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘(ஹோட்டல் ரூம்) வாடகை கொடுக்க காசில்லாத நேரத்தில் இதெல்லாம் தேவையா?’ என்று ரஜினி ரசிகர்கள் போல சென்னை அணி ரசிகர்களும் நொந்துக்கொள்கிறார்கள்.

அதிலும் ஜடஜா வாரி வழங்குவதில் பாரி வள்ளலாக மாறிவிடுகிறார். தண்ணிகேன் கொடுக்க வந்தவரையும் போக விடாமல், அவரையும் பேட்டிங் பிடிக்க சொல்லி, ரன் அடித்து பழக சொல்லி வற்புறுத்துவதாக துபாய் பக்கம் பேச்சு அடிபடுகிறதாம்.

ரெய்னா

சென்னை அணியின் ஆலமரம் ரெய்னா. கம்பெனிக்கு ஆளே இல்லை என்றாலும் தனி ஆளாக ரன் அடிப்பவர். ஆனால் இந்த சீசனில் இருந்து விலகிவிட்டார்.  ’நேத்து வந்த புள்ளப்பூச்சி எல்லாம் மண்டைல கொட்டி வெளையாடுதுப்பா.. திரும்பி வந்துரு ராசா’ என்று மொத்த சென்னை அணியே ரெய்னாவிற்கு போன் போட்டு குமுறிக்கொண்டிருக்க, ரெய்னாவோ ‘என்ன வேணா நடக்கட்டும் நா சந்தோஷமா இருப்பேன்’ என்ற தனுஷ் பாட்டை பாடிய படி, குடும்பத்துடன் சுற்றுலாவில் இருக்கிறார்.

நன்றி : inside sport

முதல் மூன்று மேட்ச்களை மட்டும் வைத்துக்கொண்டு இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. முதல் ஏழெட்டு மேட்சுகளில் கடும் வீழ்ச்சியை கண்டும் மீண்டு வந்திருக்கிறது சென்னை. அடுத்தடுத்த போட்டிகளில் அணிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஓப்பனிங், மிடில் ஆர்டர், பவுலிங், தண்ணி கேன் கொண்டு வருபவர், ஹோட்டல் ரூம் பாய் என்று எல்லா தளத்திலும் மாற்றங்கள் வேண்டும். ‘வரணும்.. பழைய பன்னீர் செல்வமா வரனும்’ என்று சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்