Aran Sei

பிராவோ பராக், ராயுடு ரிட்டன்ஸ் – தெறிக்க விடலாமா

‘திண்ணையில கெடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம்’ங்குற மாதிரி, சூப்பர் சோகத்தில் இருந்த சென்னை அணிக்கு ‘பிராவோ, அம்பத்தி ராயுடு வரவு’ உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதனால் இதயம் முரளி மோடில் இருந்துவர்கள் அதர்வா மோடுக்கு மாறி துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி படு தோல்வியை அடைந்து புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ளது. ரெய்னா, ராயுடு, பிராவோ, ஹர்பஜன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.

ஆல் ரவுண்டர் பிராவோ சென்னை அணியின் அஞ்சாநெஞ்சர் சென்றே சொல்லலாம். அணியின் மொத்த வீரர்களும் மெத்தையில் படுத்து தூங்குவது போல ஆடினாலும், பிராவோவின் மட்டை பந்தாட்டம் மொத்தத்தையும் திருப்பி போட்டு, வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும்.

ரெய்னா இல்லாத அணி, பிரேம்ஜி இல்லாத வெங்கட்பிரபு படம் போல இருக்கிறது. அதே நேரம் முரளி விஜயின் ஆட்டத்தை பார்த்தால், மணிரத்னம் படத்தில் பிரேம்ஜி சிக்கியது போல ரசிகர்களுக்கு கோவத்தை கிளப்பியுள்ளது.

சமகால தமிழ் அறிஞரும், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் இல்லாதது பந்து வீச்சு துறையில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ”லேய்ய்… மக்கா.. லே… கரயண்டா.. அவிய நாலடியார் பாடிட்டேவாச்சு நாலு விக்கெட் வாங்கிருவார்ளா நம்மட சட்டாம்பி” என்று என் நண்பரும், பானிபூரி கடைக்காரருமான சென்னை ரசிகர் ஒருவர் அடித்துக்கூறுகிறார்.

முதல் மேட்சில் வெற்றி தேடித்தந்தவர்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடுவையே மிடில் ஆர்டரில் பெரிதும் நம்பியிருக்கிறது சென்னை. ‘காலில் வெந்நீர் ஊற்றியது’ போல அவுட்டாகி ஓடாமல், வெண்பொங்கல் சாப்பிடுவது போல ஆற அமர ஆடுவார்.

இப்படி முக்கிய தலைகட்டுகள் இல்லாமல் பொலிவிழந்து கிடந்த சென்னை அணிக்கு பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் உத்வேகம் கொடுத்துள்ளார்.

அஞ்சாநெஞ்சர் பிராவோ ( நன்றி : InsideSport )

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் அளித்த பேட்டியில், “தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து ராயுடு குணமடைந்துவிட்டார். அவர் அடுத்த போட்டியில் களமிறங்குவார். எந்த இடையூறும் இல்லாமல் அவரால் வலைப்பயிற்சியில் ஈடுபட முடிகிறது.” என்று எட்டு கிலோ திருப்பதி லட்டை எடுத்து ரசிகர்களின் வாயில் ஊட்டியுள்ளார்.

லட்டோடு சேர்த்து பழனி பஞ்சாமிருதத்தையும் சேர்த்து ஊட்டியிருக்கிறார் ஃபிளம்மிங். பிராவோவை பற்றி பேச்சுக்கொடுக்கையில்,“வலைப்பயிற்சியின் போது பிராவோ சிறப்பாக பந்து வீசினார். தோல்வியில் இருந்து நாம் மீண்டு வருவோம். கடந்த காலங்களில் அதை நாம் செய்து காட்டியிருக்கிறோம். இந்தமுறையும் அது நடக்கும்.” என்று திகட்ட வைத்திருக்கிறார்.

நன்றி : GETTY IMAGES

இந்தச் செய்தி வெளிவரத் தொடங்கியவுடன் ‘வாத்தி கம்மிங் ஒத்து’ என்று சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. களம் எட்டில் நடக்கும் இந்த சேவல் சண்டையில், பிராவோ, ராயுடு வருகையால் சென்னைக்கு பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.

– அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்