Aran Sei

ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் ; என்ன எதிர்பார்க்கலாம்?

செப்டம்பர் 19-ம் தேதியிலிருந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களிலேயே தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தடைபட்டன. இப்படியான நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 19-ம் தேதியிலிருந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனியை இனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும்தான் பார்க்க முடியும்.
தோனியின் ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ட்வீட் செய்திருந்தார். அதில் நீல ஜெர்சியில் இனி தங்களைப் பார்க்க முடியாது என்றாலும் மஞ்சள் ஜெர்சியில் பார்க்கப் போகிறோம் என்றும் செப்டம்பர் 19-ம் தேதி களம் காணலாம் என கூறியிருந்தார்.

சென்னை அணியின் மிக முக்கியமான ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்று இந்திய கிரிகெட் வாரியம் அறிவித்திருந்தது.
செப்டம்பர் 1-ம் தேதி வெளியிட்ட டுவீட்டில் தனது சித்தப்பா, அத்தை, மற்றும் ஒன்று விட்ட சகோதரர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகவும் சித்தப்பாவும் ஒரு சகோதரரும் இறந்து விட்டதாகவும் அத்தை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரெய்னா தெரிவித்திருந்தார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மயிரிழையில் வெற்றியை நழுவ விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வாங்கியதில்லை.

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் என 8 அணிகள் மோதவிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் முதல் போட்டியில் எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவிருக்கிறது. எனவே சில நாட்கள் முன்னதாகவே ஐ.பி.எல் வீரர்கள் அமீரகத்துக்கு உரிய பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அலுவலருக்கும், இரண்டு இள நிலை வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

களம் கண்ட பிறகுதான் வெற்றி வாய்ப்பினைப் பற்றிய யூகங்களுக்குள் வர முடியும். இந்த ஆண்டு நடக்குமா என்று இருந்த ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கிறது என்பதே ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்