உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆட்சிக்கு வந்ததும், குற்றவாளிகளுக்கு எதிராக தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம், லக்கிம்பூர் கெரி நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்ற கார் ஏற்றப்பட்டு, விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
லக்கிம்பூர் கலவரம்: அமைச்சர் மகனுக்கு பிணை – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 19), பல கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின் ஒரு பகுதியாக, லக்கிம்பூர் கெரியில் பேரணி ஒன்றில் அகிலேஷ் யாதவ் கலந்துக்கொண்டுள்ளார்.
அப்போது உரையாற்றியுள்ள அகிலேஷ் யாதவ், “லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த ஜாலியாவாலன் பாக் சம்பவத்தை நினைவூட்டுகிறது. லக்கிம்பூர் வழக்கில் பிணைப் பெற்றவர்கள் தேர்தலின் போது, மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வைப்புத்தொகையை இழப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை தனது கட்சியின் தலைமையிலான அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
“ஒன்றிய அரசி இயற்றிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆளும் பாஜக விவசாயிகளை ஒடுக்கியது. பாஜக அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக அதன் முழு திறனையும் உபயோகித்து முடக்க முயன்றது” என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.