Aran Sei

ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்குக் காயம், மன உளைச்சல் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று (மே 21) தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

“இந்த அறிக்கையில், இந்தப் போராட்டம்குறித்துக் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்றும் இந்தப் பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.” என்று அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“1.இந்தச் சம்பவம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும். 2.22.05.2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நேரில் வர இயலாது., வீடியோ கான்பரன்ஸில் விசாரணை நடத்துங்கள்” – தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஆஜராக மறுக்கும் ரஜினி

“காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source; செய்தி மக்கள் தொடர்புத்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்