கொரோனா முழு அடைப்பை எதிர்த்து மகாராஷ்டிராவில் நடந்த போராட்டங்கள் குறித்து செய்தி காணொளி வெளியிட்டதைத் தொடர்ந்து, மில்லட் டைம்ஸ் என்ற இணையதளத்தின் சேனலை, யூடியூப் முடக்கியுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
“முழு அடைப்புக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர், முதலமைச்சரின் வீட்டை முற்றுகை இடுகின்றனர்” என்ற தலைப்பிலான செய்தியை மில்லட் டைம்ஸ் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கையை குறைப்பதற்காக மகாராஷ்டிரா அரசாங்கம் தடைகளை கொண்டு வருவதை எதிர்த்து மக்கள் புகார் தெரிவிக்கும் காட்சிகள் இருந்தன.
தனது “சமுதாய வழிகாட்டல்களை” இந்தக் காணொளி மீறியதாகக் கூறி, யூடியூப் இந்த காணொளியை வெள்ளிக் கிழமை அன்றே நீக்கியுள்ளது. இந்தக் காணொளி, யூடியூபின் “தவறான மருத்துவ தகவல் பற்றிய கொள்கை”யை மீறியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
@YouTube has blocked the @Millat_Times account for a week. We published a protest report against the lockdown in Mumbai, which was deleted by YouTube citing violations of the Community Guidelines (and also blocked the channel for a week by going on strike) pic.twitter.com/jSlQaCbVrA
— Millat Times (@Millat_Times) April 10, 2021
போராடியவர்கள் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள் என்று மில்லட் டைம்ஸ்-ன் தலைமை ஆசிரியர் ஷாம்ஸ் தப்ரேஸ் தி வயர் இடம் கூறியுள்ளார்.
“அவர்கள் மகாராஷ்டிரா முதலமைச்சரின் வீட்டுக்கு அருகில் போராட்டம் நடத்தினார்கள். பொருளாதார முடக்கத்தின் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் பேசினார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு வாரத்துக்கு எங்களால் காணொளிகளை அப்லோட் செய்ய முடியாது. ஆனால் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்” என்று மில்லட் டைம்ஸ் ட்வீட் செய்துள்ளது.
யூடியூப் நீக்கிய காணொளியையும் மில்லட் டைம்ஸ் ட்வீட் செய்துள்ளது.
This is the Video which was deleted by YouTube https://t.co/4P7vFvUCGM
— Millat Times (@Millat_Times) April 10, 2021
மில்லட் டைம்ஸ்-ன் யூடியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விரும்பியுள்ளனர் என்று தி வயர் தெரிவிக்கிறது.
2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம் யூடியூபிலும் பேஸ்புக்கிலும் தொடர்ந்து தணிக்கையை எதிர்கொண்டு வந்துள்ளது.
“இதற்கு முன்னரும் யூடியூப் எங்கள் காணொளிகளை நீக்கியுள்ளது. ஒரு காணொளி மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒரு முஸ்லீம் அடித்துக் கொல்லப்பட்டது பற்றியது. இன்னொரு காணொளி பிப்ரவரி 2020-ல் நடந்த டெல்லி கலவரங்கள் தொடர்பானது. அந்தக் கலவரங்களின் கொடூரத்தை நாங்கள் காட்ட முயற்சித்திருந்தோம்” என்று ஷாம்ஸ் தப்ரேஸ் கூறுகிறார்.
“இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காணொளி உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அதில் பொய்ச் செய்தியோ, கொரோனா பற்றிய தவறான தகவலோ இல்லை” என்று ஷாம்ஸ் தப்ரேஸ் யூடியூபுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
யூடியூபிடமிருந்து பதில் வரும் வரை, எங்கள் படைப்புகளை வேறு வழிகளில் வெளியிடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.