Aran Sei

” கணக்குகளை முடக்கா விட்டால், சிறைத்தண்டனை, அபராதம் ” – ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Image Credit : thewire.in

250-க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்கக் கூறும் தனது கோரிக்கையை மறுத்தால் சிறைத்தண்டனையை அல்லது அபராதத்தை எதிர்கொள்ள தயாராகுமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

#ModiPlanningFarmerGenocide (மோடி விவசாயிகள் படுகொலைக்கு திட்டமிடுகிறார்) என்ற ‘தூண்டிவிடும்’ ஹேஷ்டேகை பயன்படுத்திய கணக்குகளை முடக்கும்படி அரசு ட்விட்டரிடம் கூறியிருந்தது.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

அவற்றில் கிசான் ஏக்தா மோர்ச்சா, பிகேயு ஏக்தா உக்ரஹான், கேரவன் மேகசின், சிபிஎம் தலைவர் முகமது சலீம், செயல்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோரின் கணக்குகள் அடங்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, சிறிது நேரத்துக்கு ட்விட்டர் இந்த சுமார் 250 கணக்குகளை முடக்கி வைத்திருந்தது. ஆனால், பின்னர் பேச்சுரிமை, செய்தி தகுதி ஆகியவற்றை சுட்டிக் காட்டி அந்த கணக்குகளை மீண்டும் செயல்படுத்தி விட்டிருந்தது.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

இதனால் கோபமடைந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன் கிழமை அன்று ட்விட்டருக்கு பதிலடி கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

பொது ஒழுங்கை மனதில் கொண்டு பதற்றத்தையும் வெறுப்பையும் தணிக்கவும் தரப்பட்ட உத்தரவை ட்விட்டர் நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது, அமைச்சகம்.

“ட்விட்டர் ஒரு இடைநிலையாளர் மட்டுமே, அரசின் உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பு அதற்கு உள்ளது. உத்தரவை அமல்படுத்த மறுப்பது தண்டனைக்கு வழி வகுக்கும்” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ட்விட்டருக்கு அனுப்பிய ஒரு நோட்டீசில் கூறியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A[3] -ன் கீழ், ட்விட்டரின் மூத்த அலுவலர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

“பொது ஒழுங்கின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான அதிகாரிகளின் முடிவுக்கு எதிரான ஒரு மேல்முறையீட்டு அமைப்பாக ட்விட்டர் செயல்பட முடியாது. அது ஒரு இடைநிலையாளர் மட்டுமே” என்று கூறியுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், “ஒரு நீதிமன்றத்தின் பாத்திரத்தை தன் எடுத்துக் கொண்டு, அரசின் உத்தரவை பின்பற்றாததை நியாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளது.

ட்விட்டரில் தினமும், வன்முறையை தூண்டும் பல ஹேஷ்டேக்-கள் டிரெண்ட் ஆகின்றன. காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு புகழ் மாலை சூடும் ஹேஷ்டேகுகள் ஜனவரி 30 அன்று டிரெண்ட் ஆகின. உள்துறை அமைச்சகம் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்ததா என்பது பற்றி தகவல் இல்லை என்று த வயர் கருத்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்