Aran Sei

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

Image Credit : time.com

விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய கணக்குகளை முடக்கிய ட்விட்டர் இரவு 9 மணி அளவில் அவற்றை மீண்டும் செயல்படுத்தி விட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சுமார் 250 ட்வீட்டுகள்/ட்விட்டர் கணக்குகளை முடக்கும்படி ட்விட்டரை கேட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், போலீஸ் துறையினரும் அனுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எடுத்துள்ளது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கு நிலைமை மோசமாவதைத் தடுப்பதற்காக” இந்தக் கணக்குகளை முடக்கும்படி அமைச்சகம் கேட்டுள்ளது.

டெல்லி போலீசின் இணைய பிரிவு சுமார் 250 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்து, போராட்டங்களில் நடக்கும் விஷயங்களை வெளிக் கொண்டு வந்த கேரவன் பத்திரிகையின் ட்விட்டர் கணக்கு, டிராக்டர்2ட்விட்டர் கணக்கு, கிசான் ஏக்தா மோர்ச்சாவின் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

பல அரசியல்வாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இந்த தன்னிச்சையான முடிவு தொடர்பாக ட்விட்டரை விமர்சித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஷ்வி யாதவ், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

“அதிர்ச்சி! சட்டபூர்வமான கோரிக்கைகளின் அடிப்படையில் விவசாயிகள் போராட்டங்கள் பற்றிய செய்திகளை வழங்கும் பல கணக்குகளை ட்விட்டர் இந்தியா முடக்குகிறது! யாருடைய கோரிக்கை? அரசுடைய கோரிக்கையா? நிச்சயமாக எந்த நீதிமன்றத்தின் கோரிக்கையும் இல்லை”என்று வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்திருந்தார்.

 

“ட்விட்டர் அரசின் கோரிக்கைகளுக்கு அடிபணிகிறது என்றால், அது தன்னை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்துக்கான ஒரு சுயாதீனமான தளம் என்று கூறிக் கொள்ள முடியும்” என்றும் அவர்கூறியிருந்தார்.

“மத்திய அரசின் உத்தரவின்படி ட்விட்டர் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இதன் மூலம் வெளியுலகத்திற்கு தகவல் சென்று சேருவதை ட்விட்டர் தடுக்கிறது. அரசு மிகப்பெரிய ஒடுக்குமுறைக்கு தயாராகி வருவது போலத் தெரிகிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ட்விட்டர் கணக்குகளை முடக்கியது அதைக் காட்டுகிறது” என்று டிராக்டர்2ட்விட்டர் கணக்கை இயக்கும் ஐ.டி ஊழியர் பவஜித் சிங் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

இணைய சுதந்திர அறக்கட்டளை என்ற மின்னணு உரிமைகளுக்கான குழு, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் வெளிப்படையின்மையை விமர்சித்துள்ளது. அந்தப் பிரிவின் கீழ், ஒரு கணக்கு ஏன் முடக்கப்படுகிறது என்பது தொடர்பான தகவலை வெளியிடாமல் சமூக ஊடக நிறுவனங்களை அரசு தடுக்க முடியும்.

“(பிரிவு 69A) அரசின் நிர்வாகப் பிரிவு, எந்த விதமான நீதித்துறை கண்காணிப்பும் இல்லாமல், தொடர்ந்து இரகசிய தணிக்கை முறையை அமல்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.” என்று அது ட்வீட் செய்துள்ளது.

மின்னணு மற்றும் தகவல் அமைச்சகத்திடம் இருந்து சில கணக்குகளை முடக்கும்படி அதிகாரபூர்வ சட்டரீதியான கோரிக்கையை வரப் பெற்றதாக ட்விட்டர் கூறியுள்ளது.

ஆனால், அரசு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளில், குறிப்பிட்ட கணக்குகளும் ட்வீட்டுகளும் சுதந்திர பேச்சுரிமைக்குள் வருபவை என்றும் செய்தி தரம் வாய்ந்தவை என்றும்  ட்விட்டர் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, பொது விவாதத்தை பாதுகாக்கும் வகையில் இந்தக் கணக்குகளின் “முடக்கத்தை நீக்கி” விட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

தங்கள் கணக்கு மீட்கப்பட்டு விட்டது என்றும், உண்மையான ஊடகத்துக்கு உங்களைப் போன்ற உண்மையான ஆதரவாளர்கள் தேவை என்றும் கேரவன் ட்வீட் செய்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்