Aran Sei

நீதிமன்ற அவமதிப்பு – ட்வீட்டுகளுக்காக குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர் ஷா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் பற்றிய டிவிட்டர் பதிவுகள் தொடர்பாக மேடை நகைச்சுவையாளர் குணால் கம்ராவுக்கும் ரச்சிதா தனேஜாவுக்கும் தாக்கீதுகளை அனுப்பி உள்ளது. அதில் அவர்கள் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், இப்போதைக்கு பதில் தரும் போது அவர்கள் நேரில் வர வேண்டிய தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுகள் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்குரியவை என்று கருதிய மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப அரசு வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என ஒப்புதல் அளித்ததன் பேரில் இந்த தாக்கீதுகளை நீதிமன்ற அமர்வு அனுப்பி உள்ளது.

வேணுகோபால் அண்மையில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், சமூக ஊடகங்களில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்வதற்கான எந்த நடவடிக்கையும் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும், அது “ஆரோக்கியமான ஜனநாயகம்” என்பதை தகுதியற்றதாக்கிவிடும் என்றும் கூறினார்.

எனினும் தற்போது உச்சநீதிமன்றம் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடங்கியது அரிதிலும் அரிதான ஒன்று என்றும், அதுவும், வரம்பு மீறும்போது மட்டுமே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறி அதை நியாயப்படுத்தினார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் சமூக ஊடகப்பதிவுகளை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரி வரும் பெரும் எண்ணிக்கையிலான வேண்டுகோள்களால் தான் வெறுப்படைந்து விட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் வேணுகோபால் கூறி உள்ளார்.

“நான் கயிற்றின் மீது நடப்பது போல சமன் செய்கிறேன். நீதிமன்றம் அல்லது அதன் நீதிபதிகளின் பெருமையை குலைக்க, வேண்டுமென்றே முயற்சிக்கும் வகையிலான இழிவான பதிவுகள், எல்லையைத் தாண்டும் போது மட்டுமே, அவற்றின் மீது வழக்கு தொடக்க நான் ஒப்புதல் அளிக்கிறேன்.

இத்தகைய பதிவுகள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரவேற்கத் துணிவது, சமூக ஊடகங்களில் ஒரு புதிய போக்காக உருவாகியுள்ளது. அவர்கள் உச்சநீதிமன்றத்தை நடவடிக்கை எடுக்கும்படி சவால் விடுகிறார்கள்.

ஒரு சில வழக்குகளில் நான் கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால், அது சமூகவலைதளங்களில் பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தக் கூடாது என்கிற அறிவுறுத்தும் செய்தியை அனைவருக்கும் அனுப்பும்.” என அந்தப் பேட்டியில் வேணுகோபால் கூறியிருக்கிறார்.

தன்னைப் பொறுத்தவரை,  மட்டுமீறிய மொழியை பயன்படுத்துபவர்கள் மீதும் அருவெறுப்பான கேலிச் சித்திரங்களை வெளியிடுபவர்கள் மீதும் மட்டுமே அவமதிப்பு வழக்கைத் தொடுக்க ஒப்புதல் அளிப்பதாக அவர் கூறுகிறார்.

1971-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் பிரிவு 15 ன் கீழ், அரசு தலைமை வழக்கறிஞர், அல்லது பிற அரசு வழக்கறிஞர் (AGI or Solicitor general) பரிந்துரையின் பேரிலோ அல்லது தானாகவே முன்வந்தோ உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்‌.

நடைமுறையில், மனுதாரர் எவராவது தனி நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர விரும்பினால் அவர்கள் அரசு தலைமை வழக்கறிஞர் அல்லது பிற அரசு வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் பிரிவு 15 ன் தேவையை நிறைவு செய்ததாக கருதப்படுகிறார்கள். இவர்களின் ஒப்புதலும், ஒப்புதல் இல்லாமையும் நீதிபதிகளைக் கட்டுப்படுத்தாது என்றாலும் அசோக் பூஷன் அமர்வு அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துக்கு மதிப்பளித்து இருவருக்கும் தாக்கீது அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

வலுவற்ற ஒப்புதல்

ஆனால் கம்ரா மற்றும் தனேஜாவின் ட்வீட்டுள் “மிதமிஞ்சிய எல்லை மீறியவை” மற்றும் “அருவெறுப்பானவை” என்பது இன்னும் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்படி, எதிர்காலத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது அல்லது நீதிமன்ற நிர்வாகத்தை தடுப்பது ஆகிய அம்சங்கள் ஒருபுறம் இருக்க, அந்த ட்வீட்டுகளில் எந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தையாவது கேள்விக்குள்ளாக்குவது அல்லது அவதூறு செய்வது ஆகிய நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் கூறுகள் இருந்தனவா என்பது பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க ஒப்புதல் கேட்டு மனு அனுப்பிய ஒரு புகார்தாரருக்கு வேணுகோபால் கொடுத்துள்ள பதிலின்படி, கம்ராவின் நான்கு ட்வீட்டுகள் “மோசமான தரத்திலானதாக மட்டுமின்றி, நகைச்சுவைக்கும் நீதிமன்ற அவமதிப்பிற்கும் இடையேயான எல்லைக் கோட்டை மீறுவதாகவும் ” இருக்கின்றன.” என்று கூறியுள்ளார்.

இதுவே நீதிமன்ற அமர்வு மேல்நடவடிக்கைகளை எடுக்கத் தேவையில்லை என்பதற்கு போதுமானது. “மோசமான தரம்” அல்லது நகைச்சுவைக்கும், நீதிமன்ற அவமதிப்புக்கும் இடையிலான எல்லைக் கோட்டை மீறுவது என்பதால் மட்டுமே ஒருவருக்கு எதிராக பயன்படுத்துவதற்கானதாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான சட்டம் இல்லை.

அரசு வழக்கறிஞர் நகைச்சுவை, நகைச்சுவை யாகவே இருப்பதிலிருந்து மாறி, எப்போது நீதிமன்ற அவமதிப்பாக மாறியது என்ற நுணுக்கமான கருத்து நிலையை எடுக்கத் தவறி விட்டார்.

மேலும், அந்தச் சட்டம் எல்லா நீதிமன்ற அவமதிப்புச் செயல்களையும் தண்டிக்க வேண்டும் என்று கூறவில்லை. நீதிமன்றத்தின் முறைப்படியான நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், நீதி வழங்குவதை தடுப்பதாகவும் இருக்கும் செயல்களை மட்டுமே தண்டிக்கக் கோருகிறது.

அரசு வழக்கறிஞர் இவை தொடர்பான முதல் நோக்கிலான நிலைப்பாட்டைக் கூட முறையாக  உருவாக்கிக் கொள்ளவில்லை. ட்வீட்டுகள் அவமதிப்பு செய்தததற்கான என்ன கூறுகளைக் கொண்டிருந்தன என்பது தொடர்பாக தெளிவு ஏற்படுத்தாமல், அவை நகைச்சுவைக்கும், நீதிமன்ற அவமதிப்பிற்கும் இடையேயான எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டதாகக் கூறும் அவரது வெறும் கருத்தை நீதிமன்ற அமர்வு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி, “இந்த இரண்டு விரல்களில் ஒன்று தலைமை நீதிபதி அரவிந்த் போப்டேவுக்கானது” என்ற வாசகத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கும்படியான தனது படத்துடன், “….. சரி, நான் உங்களை குழப்பப் போவதில்லை, அது நடுவிரல்தான்”, என்ற கம்ராவின் ட்வீட் பற்றி வேணுகோபால் கருத்து கூறுகையில், “இது ஒட்டு மொத்தமாக அருவெறுப்பானதும் அதற்கு இணையாக உச்சநீதிமன்றத்தை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது” என்கிறார்.

‘ஒன்று ஒட்டு மொத்தமாக அருவெறுப்பாக இருப்பதும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்டது’ என்றாலும் கூட அது சட்டப்படி அவமதிப்பு குற்றம் செய்ததற்கான வரையறைக்குள் வராது என்பதால், அரசு வழக்கறிஞர் அது நீதிமன்றத்தை அவமானப்படுத்துவதாக உள்ளது என பரிந்துரைப்பது தவறானது.

இந்தச் சட்டம் நீதிமன்றம் குறித்த எல்லா அருவெறுப்பு பார்வைகளையும் அல்லது அவமானப்படுத்தல்களையும் தண்டிப்பதற்கானதல்ல. அரசு வழக்கறிஞரின் கருத்தின்படி அந்த ட்வீட் ஆபாசமானதாகவும், அருவெறுக்கத்தக்காகவுமே இருப்பதாக எடுத்துக் கொண்டாலும், அவர் கூறியது போல அது எப்படி நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைப்பதாகவும் வழக்கு தொடுக்கும் பொது மக்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாகவும் இருக்கும் என்பது தெளிவாக இல்லை.

கம்ராவைப் பின்தொடர்பவர்கள், ஒரு நகைச்சுவை நடிகரின் வாசகங்களாகக் கருதி, அவற்றை பொழுது போக்கு மதிப்பிற்காகவே கண்டு மகிழ்கின்றனர். எனவே, அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட எவரும் அவமதிப்பு பற்றி இந்தத் தெளிவற்ற கூற்றுக்களை நிரூபிப்பது கடினம் என்பதே உண்மை.

“நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் பொதுமக்களின் நம்பிக்கை குலைக்கப்பட்டுள்ளது” என்று கூறுவது ஒரு கருத்தை உருவாக்கும் அறிக்கையே ஆகும். மேலும் சட்டத்தில் அவமதிப்பு குற்றத்திற்கானது என பட்டியலிடப்பட்ட ஒரு கூறு கூட இதில் இல்லை.

ட்வீட்டுகள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் படியாக உள்ளன என்ற, அரசு வழக்கறிஞர் முன்வைப்பது போன்ற வெற்று கூற்று மட்டுமே அவமதிப்பாக குற்றம் சாட்டப்படும் செயலுக்கும், குற்றவியல் அவமதிப்பு என் வரையறைக்கும் இடையேயான புள்ளிகளை அது இணைக்க முடியாது.

அரசு வழக்கறிஞரின் கருத்து இதை விளக்கத் தவறிவிட்டதுடன், வெறும் அனுமானங்களையும், கருதுகோள்களையும் மட்டுமே நம்பியிருக்கிறது. அது முதல் நோக்கில் கருத்தை உருவாக்கிக் கொள்ள போதுமானதாக இல்லை.

பாஜக, உச்சநீதிமன்றம், ஒரு நிருபர் ஆகியோரை கொண்ட ஒரு கேலிச் சித்திரத்தை, “தூ ஜான்தா நஹி மேரா பாப் கௌன் ஹை (உனக்குத் தெரியாது என் எப்பா யாருன்னு) என்ற வாசகத்துடன் தனேஜா ட்வீட் செய்திருந்தார்.

இதற்காக. தனேஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அரசு வழக்கறிஞரிடம் அனுமதி கேட்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர் ஆதித்ய காஷ்யப் ஆகஸ்ட் 7 தேதியிட்ட தனேஜாவின்  இன்னொரு ட்வீட்டையும் சுட்டிக் காட்டியிருந்தார். “நாம் எப்படி இங்கே வந்து சேர்ந்தோம் என்பதை மறக்காமல் இருப்போம்.” என்று அதில் தனேஜா கூறியிருந்தார்..

அயோத்தி தீர்ப்பு வழங்குவதில் நீதித் துறைக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஒரு “கொடுக்கல் வாங்கல் உறவு” இருப்பதாக காட்டும் ஒரு கேலிச்சித்திரம் தொடர்பாகவும் தனேஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (அதில் நீதித்துறையை முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகோய் மூலம் பிரநிதித்துவப்படுத்தியிருந்தார்.)

காஷ்யப்பிற்கு கொடுத்துள்ள பதிலில் அரசு வழக்கறிஞர், தனேஜாவின் ட்வீட் “உச்சநீதிமன்றம் ஆளுங்கட்சிக்கு சார்பாக இருந்ததாகக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் ஆளுங்கட்சி சார்பாக நடந்து கொண்டுள்ளது என்பதைக் குறிக்கும் ஒரு கருத்து, சட்டத்தின் பிரிவு 2(சி) யில் வரையறுத்துள்ளபடி குற்றவியல் அவமதிப்பின் மூன்று கூறுகளில் ஏதேனும் ஒன்று நிறைவு செய்யக் கூடும் என்ற தவறான நிலைப்பாட்டை, அரசு வழக்கறிஞர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதே போன்ற கருத்துக்களை பல எழுத்தாளர்கள் தங்களது பகுப்பாய்வு செய்திகளில் அண்மைக் காலங்களில் செய்தித் தாள்களிலும், செய்தி வலைதளங்களிலும் வெளிப்படுத்தி உள்ளனர். நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு ஒரு மனுதாரருக்கு சார்பாக உள்ளது என ஒருவரை ஊகிக்க வழிவகுத்தால் அதை உண்மையைச் சொல்வது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நீதிமன்றம் எந்த ஒரு சர்ச்சையைத் தீர்த்து வைக்கும் போதும் அது ஒரு தரப்பினரை திருப்தி படுத்துவதாகவும் மற்றொரு தரப்பினரை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதாகவுமே இருப்பது நிச்சயமாகும்.

இதற்கு இணையாக, திருப்தி தரும் வகையில் தீர்ப்பைக் பெற்ற தரப்பிற்கு ஆதரவான நிலை எடுத்து அவருக்கு சார்பாக நீதிமன்றம் நடந்துள்ளதாக கருதமுடியும். இதன் தொடர்ச்சியாக, தீர்ப்பை சாதகமாக பெற்ற தரப்பு வழக்கில் எடுத்த நிலைப்பாட்டுக்கு சாதகமாக நீதிமன்றம் இருப்பதும் சாத்தியமாக உள்ளது.

ஒரு வழக்கில் ஒரு தரப்பின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் சார்பை, நீதிமன்றத்துக்கு எந்த அவமதிப்பையும் செய்யாமலே, ட்வீட் செய்யும் போது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்ற தேவைகளைக் கருதி, நீதிமன்றம் அந்தத் தரப்புக்கு சாதகமானது என்று பொருள் கொள்ளப்படலாம்.

அரசு வழக்கறிஞரின் நேர்காணல்கள், அவர் இரட்டை நிலைப்பாடு அல்லது புரிந்து கொள்வதில் முரணால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது‌. ஒருவர், தீங்கற்றதாகத் தோற்றமளிக்கும் ட்வீட்டுகளுக்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அதே வேளையில், சமூக ஊடக பயனாளிகளின் சுதந்திரத்திற்காகவும் நிற்பது முடியாத ஒன்று. அதைத்தான் அரசு வழக்கறிஞர் செய்கிறார்.

கடந்த 17/12 அன்று பாம்பே உயர்நீதிமன்றம் ‘தாரீக் பே தாரீக்’ (வாய்தாவுக்கு மேல் வாய்தா) என்பது ஒரு உண்மை என்று கூறி, வழக்குகள் அடிக்கடி தள்ளி வைக்கப்படுவது குறித்த விமர்சனங்களை கடுமையாக பார்க்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.

சுனைனா ஹோலி என்ற மனுதாரர், தன் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரும் வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதை குறித்த அவரது ட்வீட்டுகள் நீதிபதிகள் எஸ். எஸ்‌ ஷிண்டே, எம்‌ எஸ்‌ கார்னிக் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அவர்கள் தாராள மனதுடன் நடந்து கொள்ள முடிவு செய்தனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டனத்துக்குரியவையாகக் கருதப்படும் சுனைனா ஹோலியின் ட்வீட்டுகள் தொடர்பாக அவர் மீது ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

நீதித்துறை தங்களுடைய விலைமதிக்க முடியாத நேரத்தை அவமதிப்பு வழக்கு விசாரணைகளில் வீணடிப்பதற்குப் பதிலாக அந்த நேரத்தை சட்டத்தின் முக்கிய கேள்விகள் மீதான விசாரணைக்கு செலவிடலாம். நீதிமன்ற அவமதிப்பு அதிகாரம் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சிக்கும் ஒரு சாதாரண நபருக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடாது என நீதிபதி ஷிண்டே கூறியதாக “பார் அண்ட் பெஞ்ச்” செய்தி தெரிவிக்கிறது

அரசு வழக்கறிஞரும், உச்சநீதிமன்றமும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களா?

— வி. வெங்கடேசன்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்