Aran Sei

கலாச்சார காவல்: நடிகை சம்யுக்தாவை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்

Samyuktha Hegde

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். செப்டம்பர் 4 அன்று நண்பர்களோடு பெங்களுரு அகாரா ஏரிப்பகுதி பூங்காவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர் தன்னிடமும், தன் நண்பர்களிடமும் கடுமையாக நடந்துகொண்டதாக சம்யுக்தா ஹெக்டே பெங்களுரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்திருந்ததால் ஆடை குறித்து அநாகரிகமான முறையில் கவிதா ரெட்டி பேசியதாகவும், தனது நண்பர்களை தாக்க முயன்றதாகவும், நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். கவிதா ரெட்டி கலாச்சார காவலராக நடந்துகொண்டு கேலி செய்து அவமதித்தாக நடிகை சம்யுக்தா அவர்மீது குற்றம்சாட்டியுள்ளார்.

கவிதாவோடு மேலும் பத்து நபர்கள் தங்களை மிரட்டியதாகவும், அங்கு வந்த காவலர்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல நின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இரு தரப்பிலும் காவல் நிலையம் சென்று புகார் பதிவு செய்யப்பட்டதாக தனது இன்ஸ்டகிராமில் சம்யுக்தா பதிவிட்டுள்ளார்.

கவிதா ரெட்டி செப்டம்பர் 5ம் தேதி தனது ட்விட்டரில் ”விளையாட்டு மைதானத்தை பாதுக்காக முயன்றதில் பாதுகாவளருக்கு துணையாக இருந்ததால், பொதுவில் ஆடையைக் கழற்றி வீசும், மனநிலை சரியில்லாத இரண்டாந்தர நடிகை சம்யுக்தா ஹெக்டேயால் இழிவாக பேசப்பட்டேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

சம்யுக்தா மற்றும் அவரது நண்பர்கள் சத்தமாக பாட்டு ஒலிக்கவிட்டிருந்ததை பூங்காவின் பாதுகாவலர் புகார் செய்தததாகவும், அதற்காக சம்யுக்தாவும் நண்பர்களும் பூங்கா பாதுகாவளரைத் திட்டியதால், அவரிடம் மன்னிப்பு கேட்க மட்டுமே கூறினேன் என்றும் சம்யுக்தாவின் உடை குறித்து எதுவும் சொல்லவில்லை என கவிதா  பதிவிட்டிருந்தார்.

ஆனால், சம்யுக்தா வெளியிட்ட இன்ஸ்டகிராம் நேரடி காணொளியில் கவிதா ரெட்டி சம்யுக்தாவை அநாகரிமாக உடை அணிந்திருப்பதாக கூறியிருப்பதும், அவர்களை கவிதா கோபமாக தாக்க முற்பட்டதும் பதிவாகியிருக்கிறது.

செப்டம்பர் 5 அன்று நடிகை சம்யுக்தா ஹெக்டே, ”நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிப்பது நம் இன்றைய செயல்களே. அகாரா ஏரிப்பகுதியில் கவிதா ரெட்டி என்பவரால் தாக்கப்பட்டு கேலி செய்யப்பட்டோம். அதற்கு போதுமான ஆதாரங்களும் சாட்சிகளும் உள்ளன. இதுகுறித்து விசாரிக்க வேண்டுகிறேன்” என்று பெங்களுரு காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாகவும், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பான எதிர்காலம் உறுதி செய்யப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும் தனது ட்விட்டரில் நடிகை சம்யுக்தா கூறியிருந்தார்.

இந்நிலையில், கவிதா ரெட்டி நடந்து நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நான் கலாச்சார காவலை தொடர்ந்து எதிர்த்தே வருகிறேன். ஆனால் என்னுடைய செயல் அதனை ஆதரிக்கும் விதமாக கருதப்பட்டுள்ளது. செப்டம்பர் 4 அன்று சம்யுக்தாவோடு நிகழ்ந்த விவாதம் என்னை கோபம் கொள்ளச் செய்தது, அது என்னுடைய தவறுதான். அதற்காக சம்யுக்தா மற்றும் நண்பர்களிடம் நான் முறையாக மன்னிப்பு கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “சம்யுக்தா மற்றும் அவரின் நண்பர்களுக்கு நிகழ்ந்தது வேறு எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது. இதுகுறித்து சம்யுக்தாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அவற்றை நீக்கிவிட்டேன். இச்சம்பவத்தை பின்னுக்கு தள்ளி பெண்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி நகர்வோம் என நம்புகிறேன்.’ என அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நடிகை சம்யுக்தா ஹெக்டே கவிதா ரெட்டியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு அடுத்த சில மணி நேரங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல கவிதா எந்த பதிவையும் நீக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ரித்விகாவிடம் பேசியபோது, “கொரானா பரவலால் ஜிம் மூடப்பட்டிருந்த சமயம் நானும் நண்பர்களோடு பூங்காவில் உடற்பயிற்சி செய்து வந்தேன். யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வொர்க்-அவுட் செய்வதில் என்ன தப்பு இருக்க முடியும்?” என்றார்.

மேலும் “பூங்காவுக்கு வருபவர்களுக்கு ஒருவரின் ஆடை பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாமே. அவ்வளவு மெனக்கெட்டு ஏன் பிறரின் உடையை நின்று பார்த்து அதற்காக கோபப்பட வேண்டும்? அதற்காகவா பூங்காவுக்கு வருகிறார்கள்? சுடிதார் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்ய முடியாது. அதற்கென வசதியான உடைகள் இருக்கின்றன. முக்கியமாக, எந்த உடை அணியலாம் அணியக்கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இதன் காரணாமாக நடிகை சம்யுக்தா மற்றும் அவர் நண்பர்களை கவிதா ரெட்டி தாக்க முயன்றதும், அநாகரிமான முறையில் நடந்துகொண்டதும் கண்டிக்கத்தக்க உரிமை மீறல்” என்று கூறினார் நடிகை ரித்விகா.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்