Aran Sei

நடிகை ரியா மீது ரிபப்ளிக் டிவி திட்டமிட்ட அவதூறு – பத்திரிக்கையாளர் புகார்

Rhea

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக மூன்று நாள் விசாரணைக்கு பிறகு நடிகை ரியா சக்ரவர்த்தி போதை தடுப்புப் பிரிவினரால் நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் மும்பையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக, நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா ஜூன் 17ம் தேதி பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரவர்த்தி மீது பண மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக பீகார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடிகை ரியா சக்ரவர்த்தையிடம் போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தது.

காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியாவை 14 நட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜாமீன் கேட்டு ரியாவின் வழக்கறிஞர் விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுஷாந்த் மரணம் தொடர்பாக நடிகை ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங்கின் சமையல்காரர் தீபேஷ் சாவந்த், வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் ரியாவை குற்றவாளியாக சித்தரித்து வருவதாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகை ஸ்வரா பாஸ்கர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் மரணத்தில் ரியா சக்ரவர்த்தி பலிகடாவாக்கப்படுவதாகவும், சுஷாந்த் சிங் மட்டுமன்றி வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அனுராக் கஷ்யப் ட்விட்டரில் ” திரைத்துறையினர் அனைவருமே கடந்த 9-10 ஆண்டுகளாக சுஷாந்த்தை பார்த்தும் பேசியும் வந்துள்ளோம் என்பதை மறந்துவிட்டு ’அவர் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?  சுஷாந்த் என்ன அனுபவித்து வந்தார் என்பது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என ரியாவை பலியாக்கும் எண்ணத்தில் தொடர்ந்து பலர் கேள்விகள் கேட்கிறார்கள். ஆம். எங்களுக்கு சுஷாந்த்தை நன்றாகவே தெரியும்.” என பதிவிட்டுள்ளார்.

 

நடிகை ரியா கைதுக்கு பிறகு “பிறர் துன்பத்தை பார்த்து ரசித்தும், பொய்களை பரப்பிவருபவர்களை ஆதரித்தும் வருபவர்களுக்காக வருந்துகிறேன். உண்மை வெளிவரும் தினம் உங்களை நினைத்து நீங்களே வெட்கப்படுவீர்கள் என அனுராக் கஷ்யப் பதிவிட்டுள்ளார்.

 

போதைத் தடுப்பு பிரிவினரால் ரியா சக்ரவர்த்தி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது நடிகை டப்ஸி தனது ட்விட்டரில் ”குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே வாழ்வதற்கான உரிமையை பறித்துள்ளார்கள். இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டவர்களுகு தக்க பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.” என பதிவிட்டார்.

நடிகை வித்யா பாலன் “ரியாவை இழிவுபடுத்துவதை பார்க்கும்போது இதயம் கணக்கிறது.” என என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார்.

ரிபப்ளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் சாந்தஸ்ரீ சர்கார், ரியா கைதையொட்டி தனது ட்விட்டரில் “சமூகவலைதளத்தில் இதை தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. ரியா சக்ரவர்த்தியை தவறாக சித்தரிக்க ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங் மரணத்தில் என்னிடம் உண்மையைத் தவிர பிற எல்லா செய்திகளையும் திரட்டச் சொன்னார்கள். அதன் காரணமாகவே நான் பணியிலிருந்து விலகியிருக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும் “பத்திரிக்கையில் உண்மையை வெளிக்கொண்டு வரவே எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அதற்கு இடமில்லை” என சாந்த்ஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார். 72 மணிநேரங்கள் தொடர்ந்து வேலை பார்க்கச்சொல்லி அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் ஃபரா கான் ட்விட்டரில் தொடர்ந்து ரியாவுக்கு ஆதரவாக பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படும்போது நடிகை ரியா அணிந்திருந்த டீ ஷர்ட்டிலிருந்த ’ஆணாதிக்கத்தை அழித்தொழிப்போம்’ என்ற வாசகத்தை பதிவு செய்ததோடு, ரியாவோடு நேரடி அறிமுகம் இல்லையென்றாலும் அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக ஃபரா கான் பதிவிட்டுள்ளார்.

“அன்புள்ள ரியா, கடினமான நேரங்கள் நிலைப்பதில்லை. உங்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக இல்லாதவரை உறுதியாக நீங்கள் இதிலிருந்து மீண்டு வருவீர்கள். உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது.’ என ஃபரா கான் கூறியுள்ளார்.

இரவு முழுவதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரியா, காலை மும்பை பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்