Aran Sei

கங்கனா படத்தில் பணிபுரிய மாட்டேன் – ஒளிப்பதிவாளார் பி.சி.ஸ்ரீராம்

நடிகை கங்கனா ரனாவத் முதன்மை கதாப்பாதிரத்தில் நடிப்பதால் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்துக்கு பிறகு தொடர்ந்து திரைத்துறையினர் குறித்தும், போதைப்பொருள் மாஃபியா குறித்தும் ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

பாலிவுட்டின் மையமான மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கங்கனா பதிவிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவசேனா கட்சி மகளிரணி உறுப்பினர்கள் மும்பையில் கங்கனா ரனாவத்க்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கோஷங்கள் எழுப்பியதோடு, கங்கனாவின் புகைப்படம் ஒன்றை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “மும்பை போலீஸ் பற்றி பயமாக இருந்தால், கங்கனா மும்பைக்கு வரக்கூடாது” என கூறியுள்ளார்.

கங்கனா, செப்டம்பர் 9ம் தேதி மும்பை வருவதாகவும், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று சவால் விடும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் மும்பை குறித்த பதிவுக்கு சிவசேனா கட்சியின் ஐ.டி. பிரிவு, தானே ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் கங்கனா ரனாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தினருடன் ஹிமாச்சல் பிரதேஷ் மணாலியில் வசித்துவரும் நடிகை கங்கனாவுக்கு மத்திய அரசு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இதனிடையே, பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனக்கு கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தில் பணிபுரிய விருப்பமில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் பதிவில், ”கங்கனா ரனாவத் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் ஒரு படத்தை நிராகரிக்கும்படி ஆனது. அவரோடு பணிபுரிய மிகவும் அசௌகரியகமாக உணர்ந்தேன். என் முடிவை தயாரிப்பளர் தரப்பில் விளக்கியதும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். சிலசமயம் நமக்கு சரி எனப்படுவதைச் செய்வதுதான் முக்கியம். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்