Aran Sei

கட்டுக்கதை சொல்பவரை வைத்து ஐஎஸ்ஐஎஸ் நிகழ்ச்சி – நெருக்கடியில் நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் பல விருதுகளைக் குவித்த கலீபா (caliphate) எனப்படும் இணையதள அலைபரப்பை (podcast) ஏன் மறுபரிசீலனை செய்து வருகிறது?

கனடாவில் செய்யப்பட்ட ஒரு கைது நியூயார்க் டைம்ஸைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ருக்மிணி கள்ளிமாச்சியின் செய்தி சேகரிப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருப்பது ஏன்?

“இது ஒரு கெட்ட கனவு போன்று இருக்கிறது, நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்தின் ஆசிரியர்களை விசாரித்துக் கொண்டும் கேள்வி கேட்டுக்கொண்டும், எங்கள் நிறுவனத்தின் நட்சத்திரப் பத்திரிகையாளரும் பல விருதுகளை வென்றவரும் எங்கள் நிறுவனத்தால் கொண்டாடப்பட்டவருமான ஒருவரின் நேர்மையைப் பற்றி விசாரித்துக்கொண்டும் இருக்கிறேன் என்று வேதனையுடன் எழுதி இருக்கிறார் நியூயார்க் டைம்ஸின் நிருபர் பென் ஸ்மித்.

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த பரபரப்பான சில நிகழ்வுகள் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சம்பவத்தில் முடிவுக்கு வந்துள்ளன. அதுவே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

ஏப்ரல் 19, 2018-ல் நியூயார்க் டைம்ஸ் கலீபா (caliphate) எனும் பெயரில் பத்துப் பகுதிகளைக் கொண்ட ஒரு இணைய அலைபரப்பை (audio podcast) வெளியிட்டது. இந்த அலைபரப்புக்கான செய்திகளைச் சேகரித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் நட்சத்திரப் பத்திரிகையாளரும் அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பற்றிய தனிச்செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளருமான ருக்மிணி கள்ளிமாச்சி ஆவார்.

இந்த நிகழ்ச்சி 2018-ம் ஆண்டின் ரேடியோ மற்றும் போட்காஸ்ட் பிரிவுக்கு வழங்கப்படும் பீபாடி விருதைப் பெற்றது. இந்தப் பிரிவில் நியூயார்க் டைம்ஸ் வாங்கும் முதல் விருது இது தான். மேலும் இதற்குக் காரணமான பத்திரிகையாளர் ருக்மிணி பன்னாட்டுச் செய்தி சேகரிப்பிற்காக புலிட்ஸர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐஎஸ்ஐஎஸ் பற்றியும் பயங்கரவாதம் பற்றியும் பேசியதால் பல முன்னணிப் பத்திரிகையாளர்களால் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

இந்த மொத்த நிகழ்ச்சியும் ஒரு ஏமாற்று வேலை, உண்மைக்குப் புறம்பானது என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது எதனால்?

நியூயார்க் டைம்ஸ் இந்த மொத்த நிகழ்ச்சியையும் மறு பரிசீலனை செய்வதாகக் கூறுவது எதனால்?

செப் 25, 2020 அன்று இருபத்து ஐந்து வயதே நிரம்பிய ஒரு கனடா குடியுரிமை பெற்ற இளைஞர் அங்குள்ள காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். இவரின் கைதே இப்பொழுது நடக்கும் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம்.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞரின் பெயர் ஷெரோஸ் செளத்ரி. ருக்மிணியின் போட்காஸ்டின் நாயகர் இவரே. அவர் ஐஎஸ்ஐஎஸ் உடன் வைத்திருந்த தொடர்பை மையப்படுத்தியே அந்த போட்காஸ்டின் பல பகுதிகள் வெளிவந்தன. அந்த போட்காஸ்டின் பத்துப் பகுதிகளிலும் அவர் தன்னுடைய உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் தன்னுடைய ஜிகாதி பெயரான அபு ஹுசைபா அல் கனடி எனும் பெயரையே பயன்படுத்தி வந்தார். ஐஎஸ்ஐஎஸ்-ல் மரண தண்டனை நிறைவேற்றுபவராக தான் இருந்ததாக போட்காஸ்ட்டில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் நகைமுரண் என்னவென்றால் இப்போது அவர் கைது செய்யப்பட்டது ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்து, தான் ஈடுபட்டதாகக் கூறிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அல்ல. ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தனக்குத் தொடர்புண்டு என்று பொய் சொன்ன காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பொய் சொல்லி ஏமாற்றியதற்கான சட்டப் பிரிவில் கனடா போலீசார் அவரைக் கைது செய்து உள்ளனர். இது போன்ற குற்றத்துக்கு அங்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

பல பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி அளித்த ஷெரோஸ் செளத்ரி 2016-ம் ஆண்டில்தான் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ்- ல் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.

இவர் கைது செய்யப்பட்டது அறிவிக்கப்பட்ட உடன் நியூயார்க் டைம்ஸ்-ன் ஆசிரியர்கள் ‘ருக்மிணியின் போட்காஸ்ட் தொடர்பாகப் பல கேள்விகள் இருந்தாலும் அது உண்மைக்கு அருகில் இருக்கும் தன்மையுடன் வழங்கப்பட்டதால் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று கூறினர்.

ஆனால் நியூயார்க் டைம்ஸ்-ன் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் மூத்த ஆசிரியர்கள் பலர் இவருடைய நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கினர் என்று கூறுகிறார் பென் ஸ்மித்.

குறிப்பாக போட்காஸ்ட்-ன் 6-வது பகுதியில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை செளத்ரி வழங்கியதாகக் கூறுகின்றனர். அவர் சொல்லிய நிகழ்வுகளின் காலம் மற்றும் நேரம் தவறாக இருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார் ருக்மிணி .

செளத்ரி ருக்மிணியிடம் சொன்னதற்கு மாறான வேறு ஒரு ஆண்டையும் கால நேரத்தையும் சிசிபி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சிரியாவில் மரண தண்டனை விதிப்பவராக இருந்து இரண்டு மரண தண்டனையை விதித்ததாகக் கூறியிருந்தார் செளத்ரி. ஆனால், சிபிசியின் செய்தியாளரிடம் தானொரு போலீஸ் அதிகாரியாக இருந்ததாகவும் யாரையும் கொன்றதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏன் இது போன்ற முரண்பட்ட செய்திகளைத் தருகிறார் என்று சிபிசியைச் சேர்ந்த செய்தியாளர் விசாரித்த போதுதான் சிபிசிக்குக் கொடுத்த தகவல் அனைத்தும் உண்மை என்று தெரியவந்தது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டி அளிக்கும் சமயத்தில் மருந்துகள் எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் அதன் பின் விளைவால், கற்பனை செய்த அனைத்தையும் தான் செய்ததாகக் கூறிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் caliphate podcast நியூயார்க் டைம்ஸ்-ன் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படவில்லை. சிலர் இதை ஆதரிக்கின்றனர். ருக்மிணி இந்நிகழ்ச்சியை மறுபரிசீலனை செய்யப்படுவதை வரவேற்று இருக்கிறார்.

சௌத்ரி கூறியவற்றில் எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒரு பிரச்சனையைப் பற்றி நிகழ்ச்சி செய்வதற்கு, ஆதாரமற்ற நம்பிக்கையற்ற ஒருவரை அடிப்படையாகப் பயன்படுத்தியதே இங்கு கேள்வியை முன்வைக்கிறது

ருக்மிணியின் பத்திரிகை தர்மத்தை பலர் கேள்வி கேட்டுள்ளனர்.

தி பாப்ளர் பத்திரிகையாளர் சாஹிரா, செய்திக்காக உண்மையற்ற தகவலைப் பரப்பிய ருக்மிணி கள்ளிமாடச்சியைச் சித்தபிரமை பிடித்த மனிதர் என்றும் நியாயம் அற்ற பத்திரிகையாளர் என்றும் கூறியுள்ளார். இது போன்ற நிருபர்களால் பத்திரிகைத் துறை எங்கு சென்று முடியப்போகிறதோ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்த பத்திரிகையாளரின் வீட்டில் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார் ருக்மிணி. மரணமடைந்த பத்திரிகையாளரின் குடும்பம் நேர்காணலுக்கு மறுத்த போது அவர் எப்படி துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பதைக் கட்டுரையாக எழுதிவிடுவேன் என்று தங்களை மிரட்டியதாக அந்தக் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு, வெறும் ஐஎஸ்ஐஎஸ் அல்லது செளத்ரி பற்றிய செய்தி மட்டுமல்ல.ஒரு பத்திரிகையாளர் தனக்கு செய்தி எவ்வாறு கிடைக்கிறது, அதன் நம்பகத்தன்மை என்ன, அது சமூகத்திற்கு வைக்கும் கேள்வி என்ன இவற்றை எல்லாம் ஆராய்ந்தே வெளியிட வேண்டும். உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ்-ல் இது போன்ற நம்பகமற்ற அடிப்படையில் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றிய நிகழ்ச்சி வெளியானது ஏன் என்பது தான் பிரச்சனை.

பத்திரிகையாளர் மீது மட்டும் குற்றம் சுமத்தாமல் அவர் ஏன் இது போன்ற செய்திகளைத் தேர்வு செய்தார். இதனால் அவர் என்ன பலன் அடைந்தார், முழுமையான ஆதாரம் இல்லாமல் இந்நிகழ்ச்சியை நிறுவனம் வெளியிட்டது ஏன் என அனைத்துமே விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

(நியூயார்க் டைம்ஸ் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்