Aran Sei

நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது: நடிகர் சூர்யா

படம் : பொன்வண்ணன்

நீட் தேர்வு அச்சத்தால் கடந்த வாரத்தில், மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்தும், இறந்த மாணவர்கள் குறித்தும் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “நீட் போன்ற  ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டையாக மாறுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் படித்து முன்னேறுகிறவர்களை ‘பலியிட’ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவ அமைப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வை தள்ளி வைக்க நீதிமன்றம் மறுத்து விட்டிருந்தது.

இதுகுறித்து சூர்யா தனது அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்’  மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.”  என விமர்சித்துள்ளார்.

“ஒரே நாளில் ‘ நீட் தேர்வு’ மூன்று மாணவர்களை கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துர் கனவில் தீ வைக்கிற ‘ நீட் தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்” என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

“அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனத்தை அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.” எனவும் நீட் தேர்வை எதிர்த்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சூர்யா இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்