Aran Sei

மோடி பிறந்தநாள்: தேசிய வேலையின்மை நாள் – ராகுல் காந்தி

Image Credits: Twitter

பிரதமர் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்தநாளுக்குப் பல தலைவர்கள் வாழ்த்துக்கூறி வருகிறார்கள். இதே நேரத்தில் நெட்டிசன்கள் பிரதமரின் பிறந்தநாளை வேறு வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “தேசத்தில் வேலையின்மை அதிகரித்திருப்பதால், பிரதமரின் பிறந்தநாளை தேசிய வேலையின்மை நாளாக (ராஷ்டிரிய பெரோஜ்கர் திவஸ்) இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். “வேலைவாய்ப்பு என்பது கண்ணியம், இதை எவ்வளவு காலம் அரசு மறுக்கும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (என்.எஸ்.ஓ) அறிக்கையின்படி, இந்தியாவின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9% சுருங்கியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய சரிவாகும்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம், வேலைகளுக்கு ஆட்களைத் புதிதாகத் தேர்வு செய்யாத நிலை இருக்க, கொரோனா பேரிடர் காரணத்தால் பலரும் வேலை இழந்து வருகிறார்கள்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காகப் பல ஹாஷ்டக்குகள் ட்ரெண்டாகி வந்த நிலையில் அரசியல் ஆர்வலர் ஹன்ஸ்ராஜ் மீனாவால் உருவாக்கப்பட்ட #17Baje17Minute (17 மணி 17 நிமிடம்) எனும் ஹாஷ்டக் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதைக் குறித்து அரண் செய்யுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மைய குழு உறுப்பினர் வாசுகி “மோடி ஆட்சிக்கு வந்தபிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது” என்று கூறினார். “புதிய கல்விக் கொள்கை அமலாகிவிட்டால் இந்த நிலை இன்னும் மோசமாகி விடும்” என்றும் “பொதுத் துறையில் பல காலியிடங்கள் இருக்கும் நிலையில், பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்துவது வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகமாக்கும்” என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்