Aran Sei

‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு

Credits Live Law

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, இந்து முஸ்லிம்களுக்கிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் மூலமாக இனக்கலவரத்தை உண்டுபண்ண முயல்வதாக கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தெல் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக மும்பை மிரர் குறிப்பிட்டுள்ளது.

 

முன்னாவரலி சயத் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நீதிபதி ஜெய்தியோ குலே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திரைத்துறையைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் முன்னாவரலி சயத், கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டதைக் குறிப்பிட்டு, இப்படிக் கூறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், என்ன நோக்கத்தில் இதைக் கூறினார் என்பது விசாரிக்கப்பட வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

“இனவாதத்தைத் தூண்டும் வகையிலும், அரசுக்கு எதிரானதாகவும் உள்ள பதிவுகளுக்கு யார் ஆதரவு அளிக்கிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக ஸ்க்ரோல் இணையதளம் தெரிவித்துள்ளது.

கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153A (மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மதவெறி உணர்வுகளைத் தூண்டும் முயற்சிகளில் உள்நோக்குடன் ஈடுபடுவது) மற்றும் 124A (தேசத் துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வகுப்புவாதம், போதைப்பழக்கம் மற்றும் இனவாதத்தில் திரைத்துறை ஊறிக்கிடப்பது போன்ற சித்திரிப்பைக் கங்கனா ரணாவத் உருவாக்குகிறார் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கங்கனா, திரைத்துறையிலுள்ள கலைஞர்களுக்கு இடையே மத ரீதியிலான பிரிவினையை உண்டாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரை விசாரித்த நீதிபதி, கங்கனா ரணாவத் குற்றம் புரிந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், மொத்தக் குற்றச்சாட்டும் நேர்காணல் மற்றும் ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்துகள் குறித்து இருப்பதால், முழுமையான விசாரணை அவசியப்படுகிறது என்று கூறியதாக தி வயர்  செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று கங்கனா ரணாவத் ட்விட்டரில் குறிப்பிட்டதால் அவர் மீது கர்நாடகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

தனிஷ்க் நகைக்கடை விளம்பரம் குறித்து கங்கனா ட்விட்டரில், “இந்துக்களாகிய நாம், படைப்பாற்றல் மிக்க இந்தப் பயங்கரவாதிகள் நமது ஆழ் மனதுக்குள் எத்தகைய விஷயத்தைச் செலுத்த முயல்கிறார்கள் என்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்,”

 

“நமக்குப் புகுத்தப்படும் கண்ணோட்டத்தின் விளைவு குறித்து ஆராய்ந்து, விவாதித்து, மதிப்பீடு செய்ய வேண்டும். நமது பண்பாட்டைக் காப்பாற்ற இதுதான் ஒரே வழி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்