Aran Sei

மோடியின் விழிப்புணர்வு பிரச்சாரம் – கொரோனா நோய்த்தொற்று நிலை என்ன?

கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தொடங்கிவைத்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்குறித்து முடிவுசெய்யப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

#Unite2FightCorona என்ற ஹாஷ்டேக் பயன்படுத்தி ட்விட்டரில் ’ஜன அந்தோலன்’ என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி, மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொரோனா நோயினை எதிர்கொள்ள வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

”கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மக்களால் தொடங்கப்பட்டது. நம்முடைய இந்த ஒருங்கிணைந்த முயற்சி பல உயிர்களைக் காப்பாற்ற உதவி உள்ளது. இதையே நாம் தொடர்ந்து செயல்படுத்திக் குடிமக்களை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், ”கட்டாயமாக முகக்கவசம் அணியுங்கள். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். ஒன்றாக இணைந்து நாம் கொரோனாவை வீழ்த்துவோம்.” என்றும் கூறியிருக்கிறார்.

 

பிரதமர் மோடியின் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் பங்குகொள்ளும் விதமாக, இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால், நடிகை கங்கனா ரணாவத், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்கள், கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 78,524 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 971 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த ஒன்பது நாட்களில், நான்காவது முறையாக கர்நாடக மாநிலத்தில் 10,000-க்கும் அதிகமான நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்