Aran Sei

பெண்களை தவறாக பேசியவரை தாக்கிய பெண்களுக்கு முன் ஜாமீன் – கேரள உயர் நீதிமன்றம்

credits : bar and bench

கேரளாவில் பெண்களைப் பற்றி அவதூறாக தனது யூட்யூப் சேனலில் தொடர்ந்து பதிவிட்டுவந்த விஜய் பி நாயரை  தாக்கிய  வழக்கில் மூன்று  பெண்களுக்கும் முன் ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் தங்கும் விடுதியில் வசித்து வரும் விஜய் பி நாயர் , வி ட்ரிக்ஸ் சீன் எனும் யூட்யூப் சேனலை நடத்தி வந்தார் (தற்போது முடக்கப்பட்டுள்ளது). இந்த சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் காணொலிகளை வெளியிட்டு வந்துள்ளார்

திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுப்பவர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் குறித்தும் நாயர் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பை சேர்ந்த தியா சனா மற்றும் ஸ்ரீலக்‌ஷ்மி அரக்கல், விஜய் பி.நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றியதோடு அவரை சராமாரியாக தாக்கினர்.

பெண்களை இழிவுப்படுத்திய நாயர் தாக்கப்படுவதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர்களில் ஒருவர் நேரலை செய்துள்ளனர். விஜய் பி நாயர் கைகளாலேயே அவர் பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்ததோடு, மன்னிப்பும் கேட்க வைத்து அதனை யூட்யூபில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து தனது இருப்பிடம் புகுந்து அடித்து உதைத்து செல்போன், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்சென்றதாக விஜய் பி நாயர் கொடுத்த புகாரில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாயரின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாக ஒருவருக்கு காயம் ஏற்படுத்துவது), 506 (குற்றம் கருதி மிரட்டுவது), 294 பி (பொது இடத்தில் ஆபாசமான சொற்களை பயன்படுத்துவது), 452 (வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குவது) 392(கொள்ளையடிக்க முயன்றது) ஆகிய பிரிவுகளில் காவல்துறையினர் மூன்று பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேநேரம் பெண்களை ஆபாசமாக பேசி பதிவிட்ட விஜய் பி நாயர் மீது ஜாமினில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பெண்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

”சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக” பினராயி தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அந்த மூன்று பெண்களின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவர்களின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. விஜய் பி நாயர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்குவது பொதுமக்களுக்கு தவறான கருத்தை கொண்டு சேர்த்து விடும், மற்றவர்களும் சட்டத்தை கையிலெடுக்கும் துணிச்சலை ஊக்கப்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனவே  பெண்கள் மூவரும் தங்கள் கேரள உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.

இந்த சம்பவம் ஒரு பொது இடத்தில் நடந்ததால், வீட்டிற்குள் அத்துமீறியதாக விஜய் பி நாயர் அளித்த புகாரை நிராகரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அவருடைய அழைப்பின் பேரில் தான் அவர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதாக கூறிய வழக்கறிஞர் அவர் வீட்டை கொள்ளையடிக்க முயல்வதாக அளித்த புகாரையும் திரும்ப பெற வேண்டும் என வாதிட்டுள்ளார்.

நாயரின் விடுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட லேப்டாப் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதையும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

விஜய் நாயரைத் தாக்கிய மூவருக்கும் ஜாமீன் வழங்கினால் அது சமூகத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்த்து விடும் என நாயர் தரப்பு வாதாடியது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அசோக் மேனன், பாக்கியலஷ்மி, ஸ்ரீலட்சுமி அரக்கல், தியா சனா  ஆகிய மூவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்