Aran Sei

‘ஆரோக்கியத்தை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு’ – கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

70% க்கும் அதிகமான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் (நவீன வசதிகள் கொண்ட தொலைபேசி) பயன்பாடு அதிகரித்திருப்பது அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ மற்றும் சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் ஆகியவை இனைந்து ‘ஸ்மார்ட்போன்கள் மற்றும் மனித உறவுகள் மீது அவற்றின் தாக்கம்’ (Smartphones and their Impact on Human Relationships) எனும் தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் முக்கால்வாசி பேர் அவ்வப்போது தங்கள் கைபேசிகளை அணைப்பது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க உதவுகிறது என்று கூறியுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட எட்டு பெரும் நகரங்களில் 2,000 நுகர்வோரிடம் இக்கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர்.

“மக்களை தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைக்க உதவியதால் பொதுமுடக்கத்தின் போது ஸ்மார்ட்போன்கள் முக்கியத்துவம் பெற்றன. இது தொலைதூரத்தில் இருந்து படிப்பதற்கும் வேலை செய்வதற்குமான வசதிகளை வழங்கியது. இருப்பினும், அதிகப்படியான பயன்பாடு நுகர்வோரை அடிமையாகிவிடுகிறது” என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போனில் செலவழிக்கும் சராசரி நேரம் 25% அதிகரித்துள்ளதாக பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி தளங்களில் 60% நேரத்தை செலவிடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் விளையாட்டு செயலிகளில் (கேமிங்) அதிக நேரம் செலவிடப்படுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒரு மணி நேர உரையாடலில் குறைந்தது ஐந்து முறையாவது தொலைபேசியை எடுப்பதாகக் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 85% பேர் உறக்கத்தில் இருந்து கண்முழித்த 15 நிமிடங்களுக்குள் தங்கள் தொலைபேசிகளை பார்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போன்கள் அருகில் இல்லாதபோது எரிச்சல் அடைவதை ஒப்புக்கொண்டுள்ளனர், இது கடந்த ஆண்டு 33% ஆக இருந்தது.

பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு அவர்களின் உறவுகளை மோசமாக பாதிப்பதாக கூறியுள்ளனர். எனவே, ஸ்மார்ட்போனிலிருந்து தனித்து ஒரு வாழ்க்கையை வைத்திருப்பதற்கான அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்