Aran Sei

கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி

Image Credit : theguardian.com

ந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்கின் ட்வீட் தொடர்பாக டெல்லி போலீஸ் தேச துரோகம், சதித் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது படத்தையும், மீனா ஹாரிஸ், ரிஹான்னா ஆகியோரது படங்களையும் டெல்லியில் ஹிந்து அமைப்பினர் எரித்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியின் ஒரு சிறு பகுதியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு போராட்டத்தை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் போராட்டக் களத்துக்கு குடிநீர் வழங்குவதைத் அரசு துண்டித்திருக்கிறது, இணைய இணைப்பை தடை செய்திருக்கிறது. போராட்ட இடத்தை யாரும் நெருங்க முடியாமல் சாலைகளில் 14 அடுக்கு தடுப்பரண்கள் அமைத்தும், கம்பிகள் பதித்தும் தடை செய்திருக்கிறது.

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிகள் – தடுத்து நிறுத்திய காவல்துறை

இந்தச் செய்திகள் சர்வதேச அளவில் பரவியதைத் தொடர்ந்து, அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அமெரிக்க பாப் பாடகர் ரிஹான்னா, ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலரும் மாணவியுமான கிரேட்டா துன்பெர்க் ஆகியோர் ட்வீட் செய்திருந்தனர்.

விவசாயிகள் போராட்டம் – கிரேட்டா துன்பெர்க் ஆதரவு, ரிஹான்னாவுக்கு கங்கனா பதில்

அதைத் தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டத்தின் மீதான சர்வதேச கவனம் மேலும் அதிகரித்தது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினரான மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர்.

இந்திய வெளியுறவுத் துறை இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான சர்வதேச பிரச்சாரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவிக்க விரும்புபவர்கள், பயன்படுத்த வேண்டிய ஹேஷ்டேகுகளை பரிந்துரைப்பது, மனுக்களில் கையொப்பமிடுவது ஆகிய விபரங்கள் அடங்கிய “கருவிகள்” பற்றி கிரேட்டா துன்பெர்க் ட்வீட் செய்திருந்தார்.

கிரேட்டா துன்பெர்க் ட்வீட் செய்த போராட்டக் காரர்களுக்கான கருவிகள் தொடர்பாக டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தான் தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பதாக கிரேட்டா துன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.

“விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கான தனது ஆதரவை,  வெறுப்பும், மிரட்டல்களும், மனித உரிமை மீறல்களும் எவ்வளவுதான் கொட்டப்பட்டாலும், எப்போதும் மாற்ற முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

கிரேட்டா துன்பெர்க், ரிஹான்னா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுக்கு எதிராக டெல்லியில் கூடிய ஒரு கூட்டம் இருவரின் புகைப்படங்களுக்கும் தீயிட்டு கொளுத்தியது. இந்திய விவகாரங்களில் சர்வதேச தலையீடு பொறுத்துக் கொள்ளப்படாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

Image Credit : Reuters
மீனா ஹாரிஸ் படம் எரிப்பு – Image Credit : Reuters

“இந்திய விவசாயிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக நான் குரல் கொடுத்தேன். அதற்கான எதிர்வினையை பாருங்கள்” என்று மீனா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.

யுனைட்டட் ஹிந்து முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மீனா ஹாரிஸின் படத்தை எரித்து எதிர்ப்பைக் காட்டினார்கள் என்ற ராய்ட்டர்ஸ் புகைப்படத்துடன் கூடிய செய்தியை அவர் பகிர்ந்திருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்