Aran Sei

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

மார்க் ஜீக்கர்பெர்க் நன்றி : தி கார்டியன்

முகநூல் (ஃபேஸ்புக்) மக்களிடையே வெறுப்பை விதைத்து லாபம் அடைவதாக அதில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான மார்க் லக்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

‘டெல்லி கலவரத்தைப் பற்றித் தகவலைத் தெரிவிக்க மக்கள் முன்வர வேண்டும்’ – குடிமக்கள் குழு

வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை 700-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் முகநூலின் முன்னாள் ஊழியரான அட்லாண்டாவைச் சேர்ந்த மார்க் லக்கி கடுமையான குற்றச்சாட்டுகளை ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளார். ஃபேஸ்புக் சரியான தருணத்தில் முறையாக செயல்பட்டிருந்தால் டெல்லியில் நடந்த கலவரத்தையே தடுத்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

”மக்களிடையே வெறுப்பை பரப்புவதன் மூலம் ஃபேஸ்புக் லாபமடைவதாக”  அவர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த கலவரத்தில் ஃபேஸ்புக் பங்கை விசாரித்த  டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழுவிடம் இந்த வாக்குமூலத்தை லக்கி அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சதாவால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தலைவர்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், உலகில் உள்ள பல முக்கிய அரசியல் தலைவர்கள் இவருடைய உதவியை நாடுவதாகவும், இவரும்  அவர்கள் மூலம் சில ஆதாயங்களை அடைந்துள்ளதாக லக்கி கூறியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது..

சமூக வழிகாட்டுதல்களை (community guidelines – ஒரு பதிவு மக்களிடையே வெறுப்பை பரப்பினால் அதை உடனடியாக நீக்கிவிட வேண்டும்) ஃபேஸ்புக் அமல்படுத்தியிருப்பதில் பெரும் சமரசங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெற்றுள்ளதாக லக்கி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் தனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லாத, ஒரு பொது அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அது மிகவும் போலியானது எனவும் மார்க் லக்கி தெரிவித்துள்ளார்.

முகநூல் சற்று துரிதமாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டு இருந்தால் டெல்லி வகுப்புவாத கலவரம், மியான்மர் மற்றும் இலங்கையில் நடந்த இன அழிப்பு கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம் என மார்க் லக்கி கூறியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

மார்க் லக்கி சுமத்திய குற்றச்சாட்டுக்கு முகநூல் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

இந்தியாவில் முகநூலை கட்டுப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் பாஜக அரசின் ஆதராவளர்கள் என செய்தி வெளிவந்ததில் இருந்தே முகநூலில் திட்டமிட்டே சிலருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் பரப்பபடுகிறதா எனும் கேள்வி வலுவடைந்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முகநூலின் பொது கொள்கை இயக்குனர் அங்கி தாஸ் இரண்டு வாரங்களுக்கு முன் பதவி விலகியுள்ளார். மோடியை வெளிப்படையாக ஆதரித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதோடு, 2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற உதவியதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்