Aran Sei

ஃபேஸ்புக்கில் இருந்து அங்கி தாஸ் பதவி விலகல் : நாடாளுமன்ற விசாரணையின் எதிரொலியா?

Credits The Quint

ஃபேஸ்புக்கின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான  கொள்கைப் பிரிவு நிர்வாகியாக பதவி வகித்துவந்த அங்கி தாஸ் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் அரசியல் பதிவுகள் எந்த வகையில் கையாளப்படுகிறது என்பது குறித்து அங்கி தாஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இந்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அங்கி தாஸ் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

விளம்பரதாரர்களின் வணிக பயன்பாடுகளுக்காக பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் எடுக்கக்கூடாது என்று நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், அங்கி தாஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

“பொது சேவை மீதுள்ள ஈடுபாட்டால் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து அங்கி தாஸ் விலக முடிவு செய்துள்ளார்.” என்று ஃபேஸ்புக் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்துள்ளதாக லைவ் மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“அங்கி தாஸ் ஃபேஸ்புக்கின் ஆரம்பகாலம் முதல் இருந்துவரும் இந்திய ஊழியர்களில் ஒருவர்.  கடந்த 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அங்கி தாஸ் ஃபேஸ்புக் குழுவினருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இந்தியர்களை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தால் மட்டுமே வழிநடத்தப்பட்ட மிகச் சிறிய நிறுவனமாக நாம் இருந்தோம். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கையில் அந்த நோக்கம் முற்றிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளதாக டெக் க்ரன்ச்  வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, “நிறுவனத்திலுள்ள மிகத் திறமையான நபர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். உலகுக்கு இவ்வளவு அழகான ஒன்றை உருவாக்கிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி மார்க். கட்டாயம் நாம் ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருப்போம் என்பது எனக்குத் தெரியும்.” என்று அங்கி தாஸ் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் The Wall Street Journal,  ஃபேஸ்புக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ, ராஜா சிங்கின் வன்முறையை தூண்டும் விதமான இஸ்லாமிய வெறுப்பு பதிவுகள் நீக்கப்படாமல் இருப்பது பற்றி செய்தி வெளியிட்டிருந்தது.

அங்கி தாஸின் தலையீட்டால் பாஜக தலைவர்களின் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், 2019ல் சிஏஏவை ஆதரித்து அங்கி தாஸ்  பகிர்ந்திருந்த பதிவில், இஸ்லாம் இழிவான சமூகம் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து விமர்சனங்கள் எழுந்த பின்னர், அங்கி தாஸ் அப்பதிவினை நீக்கிவிட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்