Aran Sei

விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ

தில்ஜீத், கங்கனா ராணாவத் - Image Credit : India Today

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பஞ்சாபைச் சேர்ந்த மகிந்தர் கவுர் என்ற வயதான விவசாயப் பெண்மணியை, “ரூ 100 வாங்கிக் கொண்டு ஷாகீன் பாகில் போராடிய பில்கிஸ் தாதி இப்போது விவசாயிகள் போராட்டத்துக்கும் வருகிறாரா” என்று கிண்டல் செய்து இந்தி நடிகை கங்கனா ராணாவத் ட்வீட் செய்திருந்தார்.

‘சுஷாந்த் வழக்கில் கங்கனா விளம்பரம் தேடிக் கொள்கிறார்’ – ஜாவேத் அக்தர்

இது தொடர்பாக பேசிய மகிந்தர் கவுர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. “100 ரூபாய் வாங்கிக் கொண்டு போராடப் போவதற்கு நான் முட்டாளா? கங்கனா ராணாவத் என் வயலில் அறுவடை வேலைக்கு வந்தால் 400 ரூபாய் நான் தருகிறேன். பசுக்களிடம் பால் கறந்து, அவற்றுக்கு தீனி போட்டு, அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்தால் அவருக்கு 500 ரூபாய் சம்பளம் தருவேன்” என்று அவர் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பஞ்சாபி பாடகரும் பஞ்சாப் சூப்பர் ஸ்டாருமான தில்ஜீத், மகிந்தர் கவுர் பேசிய வீடியோவை ட்வீட் செய்து, “இதைப் பார், இவர் பில்கிஸ் தாதி இல்லை என்பதற்கான ஆதாரம். உன்னைப் போன்ற ஒரு முட்டாள் பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். இவ்வளவு முட்டாளாக ஒருவர் இருக்கக் கூடாது” என்று கங்கனாவை டேக் செய்து கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த, கங்கனா, “தில்ஜீத் கரண் ஜோகரின் செல்லப் பிள்ளை” என்றும், “நீ ஆரம்பித்த இந்த நாடகம் என்னவாக இருந்தாலும் உடனே நிறுத்து” என்று ட்வீட் செய்தார்.

“உனக்கு மரியாதையாக பேசத் தெரியாதா? தாய்மார்களையும், சகோதரிகளையும் பற்றியுமாவது மரியாதையாக பேசக் கற்றுக் கொள். அவர்கள் ரூ 100-க்கு விலை போய் விட்டார்கள் என்று சொல்கிறாய். நீயும் ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு இப்படிச் சொல்லலாமா? பஞ்சாபின் தாய்மார்கள் எங்கள் தெய்வங்கள். தேன் கூட்டில் கை வைக்காதே, அவர்கள் உன்னை கொட்டி விடுவார்கள்” என்று பஞ்சாபியில் தில்ஜீத் பதிலளித்தார். “உனக்கு பஞ்சாபி தெரியாது என்றால் கூகிள் செய்து பார்” என்றும் கூறினார்.

“எனக்கு பஞ்சாபி தெரியும். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் பெயரில் அப்பாவிகளை கொலை செய்தவர்களை நீ ஆதரிக்கிறாயா? வெக்கக்கேடு! கரண் ஜோகர் எப்படி ஆட்களை வேலைக்கு எடுக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்” என்று கங்கனா ராணாவத் பதிலளித்தார்.

‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு

“பேச்சை ஏன் மாற்றுகிறாய்? நாங்கள் எதைப் பேசுகிறோம்? நீ அதற்கு பதிலாக என்ன சொன்னாய்? நான் ஒரு கேள்வி கேட்டேன், அதற்கு நேரடியாக பதில் சொல்? எங்கள் தாய்மார்களுக்கு எதிராக ஏன் குரைத்தாய்? எங்கள் தாய்மார்களுடன் ஒரு முறை பேசிப் பார்? உன்னுடைய நட்சத்திர பந்தாவை எல்லாம் ஒரே அடியில் பிதுக்கி விடுவார்கள்” என்றார் தில்ஜீத்

போராடும் விவசாயிகளின் வீடியோ ஒன்றை ட்வீட் செய்த தில்ஜீத், “இவர்களைப் பார்த்தால் கலவரக் காரர்கள் போலத் தெரிகிறதா, உனக்கு. ரத்த ஆறு பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாய். என்னதான் வேண்டும், உனக்கு?. இந்த தாய்மார்கள் இந்த மண்ணில் எங்கள் தெய்வங்கள். எப்படி பேச வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லை. மூத்தவர்களுடன் மரியாதையாக எப்படிப் பேச வேண்டும் என்று நாங்கள் பஞ்சாபிகள் உனக்குச் சொல்லித் தருகிறோம்” என்றார்.

இது தொடர்பாக, The Quint செய்தித் தளம் தயாரித்து வெளியிட்டுள்ள வீடியோவின் உரை மொழியாக்கத்தைத் தருகிறோம். வீடியோவை பார்த்து மகிழுங்கள்!

“தேஷ் பக்த்” கங்கனா ராணாவத்-க்கும் ‘காலிஸ்தானி’ தில்ஜித் தோசான்ஜ்-க்கும் இடையேயான டுவிட்டர் மோதல்

கங்கனா ராணாவத் – மகாராணி
கங்கனா ராணாவத் – பெண்ணுரிமைவாதி
கங்கனா ராணாவத் – பாலிவுட்டில் வெளியாட்களின் குரல்
கங்கனா ராணாவத் – கடைசி வரை போராடும் பெண்
கங்கனா ராணாவத் – பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின்
கங்கனா ராணாவத் – உங்களை விட புனிதமானவர்
கங்கனா ராணாவத் – உளவியல் நிபுணர்
கங்கனா ராணாவத் – தேஷ் பக்த்

பத்மஶ்ரீ கங்கனா ராணாவத் இது எல்லாமாகவும் இன்னும் அதிகமாகவும் இருப்பவர்.
அவரே சொல்வதன் படி….
அசல் தேஷ் பக்த் ஒரே ஒருவர்தான் உள்ளார், அதுதான்
பத்மஶ்ரீ கங்கனா ராணாவத்!

கங்கணா ரணாவத் தனது அறிவு முத்துகளை உதிர்ப்பது வரை எந்த விவாதமும் நிறைவடையாது என்பது நிச்சயம்

“நீங்க ஒத்துக்கோங்க ஒத்துக்காம போங்க, என்னுடைய ட்வீட் உங்கள் டைம்லைனுக்கு விருந்தாளி”

இந்திய வரன் பார்க்கும் மாமிகள் “அட்ஜஸ்ட்”, “காம்ப்ரமைஸ்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை விட அதிகமாக அவர் “பயங்கரவாதி”, “துக்டே துக்டே கேங்”, “ஜிகாதி” போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவார்

ஏனென்றால், செல்வி கங்கனா ராணாவத்தையும் அவரது நம்பிக்கைகளையும் ஆதரிக்காத யாரும் தேச விரோதிகள் என்பது வெளிப்படையானது.

அதுதான், டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.

கங்கனா ராணாவத் பஞ்சாபின் சூப்பர் ஸ்டார் தில்ஜித் தோசாஞ்சை ஒரு “காலிஸ்தானி” என்று முத்திரை குத்தினார்.

ஏன்?

ஒரு பொய் ட்வீட்டை கங்கனா வெளியிட்டதை தில்ஜித் கண்டித்தற்காக

இது எப்போதெல்லாம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் சண்டைதான்!

ஆனால், இந்த முறை, தில்ஜீத் பல ட்வீட்டுகளில் சொன்னது போல, “அவர் இந்த முறை தப்பான ஆட்களோடு மோதி விட்டார், பஞ்சாபிகளோடு!” அவர்கள் சீக்கிரம் விட்டுக் கொடுத்து விடுவதில்லை!

தில்ஜீத் சொன்னது போல “இரண்டு வார்த்தைக்கு நாலு வார்த்தை இல்லை, 36 வார்த்தை பதிலடி தருவோம்” அதேதான் நடந்தது.

கங்கனாவின் ஒரு ட்வீட்டுக்கு தில்ஜீத்தின் இரண்டு பதில்கள்… ஒரு ட்வீட், பதில் இரண்டு!
ட்வீட், பதில்… ட்வீட், பதில்…

அப்புறம் என்ன? வாயடைப்பு!! நீண்ண்ண்ட அமைதி!

டுவிட்டர் தன்னுடைய “சிங் சாஹபு”க்கு உரத்த கரகோஷம் செய்து ஆதரவு தெரிவித்தது.

பெரும்பாலானவர்களுக்கு அவர் சொன்னது என்னவென்று துல்லியமாக புரியவில்லைதான், ஏனென்றால் அவர் ட்வீட் செய்தது பஞ்சாபியில்.

டிவிட்டர் எப்போதுமே செய்ய விரும்பியபடி, கங்கணாவின் சின்னச் சின்ன தவறுகளைக் கூட கண்டித்ததன் மூலம் இந்த “சிங்” அந்த நாளில் டிவிட்டரின் “கிங்” ஆனார்!

“பஞ்சாபியை கூகிள் செய்து புரிஞ்சுக்கோ” என்று அவர் ஒரு குறிப்பை சேர்த்திருந்தார், நாட்டில் பாதிப் பேர் அதைத்தான் செய்கிறார்கள் என்று மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தால்!

கங்கனாவின் குருட்டுத்தனமான டுவீட்டுகளை தில்ஜீத் சிங் கண்டிப்பதிலிருந்து இது தொடங்கியது.

“பஞ்சாபில் நாங்கள் தாய்மார்களை வணங்குகிறோம். அவர்களுக்கு ரூ 100 கொடுத்து போராட வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாயா?” தில்ஜீத் கங்கணாவிடம் பதில் கேட்டார்.

அதற்கு கங்கனா என்ன செய்தார்?

அதை இந்தி திரைப்பட உலகம் பற்றியதாக, கரண் ஜோகர் பற்றியதாக மாற்றினார்.
பஞ்சாப் ஆக இருந்தாலும் சரி, உத்தர பிரதேசம் ஆக இருந்தாலும் சரி, கரண் ஜோகர் மீது பழியைப் போடு!
இது ஏமாத்து வேலை!

தேஷ் பக்த் கங்கனா டெல்லி கலவரங்கள் பற்றியும் ட்வீட் செய்ய ஆரம்பித்தார். ஏன்னு நமக்குத் தெரியாது!

ஆனால், சர்தார்ஜி கங்கனாவின் உத்தியைப் புரிந்து கொண்டார்
அதற்காகவும் கங்கனாவை கண்டித்தார்

“எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், நீ என்ன பேசுகிறாய்… புத்தி சரியாத்தான் இருக்கா?” என்று ட்வீட் செய்தார்.

ஓ கடவுளே!

கங்கனா சொன்ன ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் ஒவ்வொரு டிவிட்டர் பயன்படுத்துபவரும் சொல்ல வேண்டிய பதில் அது.

கடைசியில் என்ன ஆனது? நீங்க என்ன நினைக்கிறீங்க? இத்தோடு முடிந்ததா?
இல்லை, இல்லை, இல்லை, இல்லை
பாப்கார்ன் எடுத்துக்கோங்க, படம் தொடர்கிறது

கங்கனா தில்ஜீத்தை “முட்டாள்” என்றார்.
தில்ஜீத் கங்கனாவை “ஒழுங்காக பேசத் தெரியாதவர்”, “மந்த புத்தி” என்று ட்வீட் செய்தார்.
இந்த ட்வீட்டுடன் ஒரு எச்சரிக்கையும் வந்தது, “பாலிவுட்டில் ஒன்னோட தாதாகிரி செல்லுபடியாகும், இது பஞ்சாபி, இங்கே ஒன்னோட வேலை செல்லாது”

கங்கனாவும் சீக்கிரம் விட்டுக் கொடுப்பவர் இல்லை? அப்படித்தானே!

எனவே, இந்த முறை, டிவிட்டருக்கு மிகவும் பிடித்தமான துருப்புச் சீட்டை கையில் எடுத்தார், “தேஷ் பக்த் சீட்டு” அவர், தில்ஜீத்தை “பயங்கவாதி” என்றும், “காலிஸ்தானி” என்றும் “துக்டே துக்டே கேங்”-ன் ஒரு பகுதி என்றும் கூட முத்திரை குத்தினார்.

அப்போதுதான், பலபேர் செல்வி கங்கனா ராணாவத்துக்கு சொல்ல விரும்பிய ஒன்றை சிங் சாஹப் சொன்னார்.

“அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று உனக்கு ஆசை இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், குறைந்தபட்சம் தெளிவோடு பேசு! நாங்கள் விவசாயிகள் பற்றியும், எங்கள் தாய்மார்கள் பற்றி நீ பேசிய குப்பைகள் பற்றியும் பேசிக் கொண்டிருகிகறோம். இப்போ ஓடிப் போயிடு. நீ சொல்லும் படம் (பஞ்சாப் 1984) ஒரு தேசிய விருதை வென்றது”

ஒரு சிலர் #SabParrBhariKangana என்ற ஹேஷ் டேக்-டன் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர், கங்கனா உட்பட.
ஆனால், ஹேஷ்டேக்-களின் மோதலில் கூட #DiljitDestroysKangana வெற்றி பெற ஆரம்பித்தது.
கங்கனா ட்வீட் செய்வதை நிறுத்திக் கொண்டார்.

ஆனா நினைவிருக்கட்டும் “2-க்கு 4 இல்லை, 36 பதில் தருவோம்”
அதனால் “பாஜி” விடவில்லை.

“இந்தியா உனக்கு மட்டும் சொந்தமில்லை. அரசியல்வாதி போல பேசுவதை நிறுத்திக் கொள், பஞ்சாப் நாட்டுக்காக பல உயிர்களை தியாகம் செய்திருக்கிறது. அதனால் எங்கள் தாய்மார்கள் பற்றி பேசும் போது என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக பேசு”

இல்லை, இத்தோடு முடியவில்லை.

“ஒரு அமைதியான போராட்டம் நடந்து வருகிறது. எல்லோரும் விவசாயிகளை ஆதரிக்கிறார்கள். கங்கனா போன்றவர்கள் எங்கிருந்தோ வந்து முக்கியமான விவாதத்தை தொடர்பில்லாத வேறு ஒன்றுக்கு இழுத்துப் போகிறார்கள். அதைத்தான் அரசியல் செய்வது என்கிறோம். பஞ்சாபிகளான எங்களுக்கு உன்னைப் பற்றி நன்கு தெரியும். எங்கள் தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு உன் “கர்மா”வை நேர் செய்து கொள்”

பின்னர், கடைசியாக தில்ஜீத் தனது டிவிட்டர் கணக்கில் பின் செய்த ட்வீட் “நாங்கள் எங்கள் தாய்மார்களை வழிபடுகிறோம். அவர்களுக்கு அவமரியாதை செய்யும் யாரும் எங்களைப் பொறுத்தவரை நட்சத்திரம் கிடையாது. அவர்களிடம் மன்னிப்பு கேள், இப்போதைக்கு ஓடிப் போயிடு. இன்னைக்கு உன்னோட அட்டகாசம் அளவு மீறி போய் விட்டது. எங்களோடு மீண்டும் சண்டை செய்ய விரும்பினால், திருப்பி அடிக்க நாங்க எப்போதும் தயாராக இருக்கிறோம்”

கங்கனா ராணாவத்தை ஒரு நடிகர் கண்டித்தது இது முதல் முறை இல்லைதான்.
ஆனால், கங்கனா ராணாவத்தை ஒருவர் வாயடைக்கச் செய்தது இதுதான் முதல் முறை.
டிவிட்டரில் ஒரே கொண்டாட்டம்!

கங்கனா ராணாவத் அடுத்ததாக கருத்து சொல்லி தனது நிபுணத்துவத்தை எதில் காட்டப் போகிறார் என்று யோசிக்கிறீர்களா?

ஆனால் இப்போதைக்கு நாம் உண்மையான விஷயங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்போம், கங்கனா ராணாவத்தையும் அவரது அற்பத்தனமான டிவிட்டர் சண்டைகளையும் விட்டு விடுவோம்.

ஆமா, கங்கனா ராணாவத்தைப் பற்றி ஒரு முழு, நீண்ட வீடியோ தயாரித்த நாங்கதான் சொல்கிறோம்!!

இது தொடர்பான இன்னொரு வீடியோ

தில்ஜீத் தோஷாந்துக்கும் கங்கனா ராணாவத்துக்கும் இடையே இந்த ஆண்டின் மிகப்பெரிய டிவிட்டர் மோதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்