Aran Sei

சீனாவில் ஊடகவியலாளர்கள் தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட தடை- ஊடகவியலாளர் கூட்டமைப்பு கண்டனம்

Image Credit : thewire.in

ஊடவியலாளர்கள் தணிக்கையின்றி தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட சீனா தடை விதித்ததற்கு, உலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IJF) கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

“பொதுமக்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட அனுமதிக்கும் ஊக்கமிகுந்த சமூகம் தான் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை” என்று அது தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய பத்திரிகை மற்றும் பதிப்பு அமைப்பு (NPPA) நடத்திய ஊடகவியலாலர்களுக்கான வருடாந்திர ஊடக தகுதிப்பாடு புதுப்பிப்பு (Press credentials renewal) நிகழ்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊடகவியலாளர்கள் தங்களின் பணி நிமித்தம் சேகரிக்கும் தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.விதிகளை மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாவதுடன், ஊடக தகுதிப்பாட்டை இழக்க நேரிடலாம்.

செய்தித்தாள், ஒலிபரப்பு நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி வலைதளங்கள் மற்றும் செய்தி தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த விதிகள் பொருந்தும்.

“சீனாவில் மக்கள் ஊடகம் என்றழைக்கப்படும் சமூக வலைதள செய்திகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. ஊடகவியலாளர்கள் தங்களது நிறுவனங்களால் புறக்கணிக்கப்படும் செய்திகளை கூட சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் விதிக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுப்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன” என IFJ தெரிவித்துள்ளது.

Wechat, weibo உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் எந்தவித கட்டுப்பாடுமின்றி செய்திகள் பதிவு செய்கின்றனர். அதன் மூலம் அவை “மக்கள் ஊடகமாக” செயல்படும் போக்கு சமீப காலங்களில் சீனாவில் வெகுவாக அதிகரித்துள்ளது.

வேலை சம்பந்தமான தகவல்களை பதிவிடுவது, போலி தகவல்களை பரப்புவது, சொந்த நலன்களுக்காக செய்தி வெளியிடுவது போன்றவற்றை இந்தக் கட்டுப்பாடுகள் சட்ட விரோதமாக்குகின்றன என தாய்வான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் செய்திகளை தெரிந்துகொள்ளும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீன ஊடகவியலாளர்களை “மக்கள்-ஊடகங்களை” நாடத் தூண்டியுள்ளன என்று ஹாங்காங் செய்தித்தாள் மிங் பாவோ தெரிவித்துள்ளது – தனிநபர்கள், குறிப்பிட்ட குழுக்கள் (பெரும்பாலும் பொழுதுபோக்குக்காக செய்பவர்கள்) இயக்கும் ஆன்லைன் செய்தி கணக்குகளை மனதில் கொண்டு மிங் பாவோ இதை குறிப்பிடுகிறது.

“வழக்கமான செய்திகள் அதிகாரிகளால் கடுமையான தணிக்கைக்கு உள்ளாவதால், செய்திகளை வெளியிடுவதற்கும் கருத்துக்களை பகிர்வதற்கும் ஒரு மாற்று வெளி தேவைப்படுவதன் அவசியத்தை “மக்கள் ஊடகத்திற்கு” கிடைக்கும் வரவேற்பு பிரதிபலிக்கிறது” என்று தாய்வான் நியூஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி 22 அன்று, சீனாவின் மின்வெளி (Cyberspace) நிர்வாகம் தகவல்களைத் திரிப்பது, தவறான ஆதாரங்களைக் சுட்டுவது, பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மற்றும் திருட்டுத்தனமாக செயல்படுவது போன்றவற்றை தடுப்பதற்காக திருத்தப்பட்ட இந்த விதிகளை வெளியிட்டது என்று IFJ தெரிவித்துள்ளது.

ஆன்லைன் பதிவுகளை கட்டுப்படுத்தும் இந்த புதிய விதிகள் வணிக நிறுவனங்கள், பிரபலங்கள், தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் உருவாக்கப்படும், பொது சமூக ஊடக கணக்குகளையும் குறிவைக்கிறது.

கொரோனா பரவியபோது, ​​“ஒரு சில ‘ மக்கள்-ஊடக ’கணக்குகள் ஆன்லைன் வதந்திகளை உருவாக்கி பரப்பின, அத்துடன் மற்றவர்களின் தனியுரிமையை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளன” என்று மின்வெளி கண்காணிப்புக் குழு வாதாடுகிறது. இதனால் “சமூக நல்லிணக்கமும், உறுதியும் குலைகிறது” என்றும் மின்வெளி கண்காணிப்புக் குழு கருத்து தெரிவிக்கிறது.

கொரோனா ஆரம்பமான காலங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மக்கள் ஊடகங்களையும் சுதந்திர ஊடகவியலாளர்களையும் தான் மேற்சொன்ன நிகழ்வு குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். கொரோனா பரவல் குறித்த செய்திகளை மூடி மறைக்க முயன்ற அரசின் முயற்சிகளை வெளிக் கொண்டுவந்த ஊடகவியலாளர்களை அரசு கைது செய்ததிலிருந்தே இதனை உறுதிப்படுத்த இயலும்.

டிசம்பர் இறுதியில் சுதந்திர ஊடகவியலாளர் சாங் சானுக்கு ஆன்லைனில் சண்டையிட்டார் என்றும் பிரச்சினையை தூண்டினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சீனா தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் மிக மோசமான இடத்திலிருக்கிறது, ஊடக சுதந்திர தரவரிசையில் குறைந்த இடத்தை பெற்றுள்ளது. 2020 டிசம்பரில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி அங்கு 47 எழுத்தாளர்கள்  சிறையில் உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சிறையிலிடுவதிலும் சீனா முன்னணி வகிக்கிறது.

பிப்ரவரி 22-லிருந்து நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் பிரச்சினைக்குரிய ஆன்லைன் செயல்பாடுகளுக்கு பொது கணக்குகளையும் சமூக வலைதள நிறுவனங்களையும் பொறுப்பாக்கும், முறையான கருத்து பரிமாற்றத்திற்கும், ஆரோக்கியமான மின்வெளிக்கும் இது உதவும் என்று மின்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கமும் டிஜிட்டல் செய்தி வழங்குநர்களுக்கான கட்டாய பதிவு நடைமுறையை பரிசீலித்து வருகிறது. டிஜிட்டல் செய்தி வழங்குநர் என்றால் நிறுவனமா, தனிநபர் ஊடகவியலாளரா, வலைப்பூவில் எழுதுபவரா அல்லது பேஸ்புக்கில் எழுதுபவரா என்பது குறித்தெல்லாம் தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனா தற்போது நடைமுறைப்படுத்தும் அளவுக்கான கட்டுப்பாடுகளை இந்தியா இதுவரை விதிக்கவில்லை என்றாலும் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து மாநில அரசுகள் மற்றும் தலைவர்களை விமர்சித்ததற்காக பல செய்தி நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குகளும், புகார்களும் இந்தியாவில் அளிக்கப்பட்டுள்ளன.

IFJ வின் முழு அறிக்கை கீழே கொடுக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் மீதான கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்கியுள்ளது, இதனால் சமூக ஊடக கணக்குகள் வழியாக ஊடகவியலாளர்கள் சுயமாக செய்தி வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.

சீன மின்வெளி கண்காணிப்புக் குழு போலி செய்திகள் மற்றும் பொது சமூக ஊடக கணக்குகளின் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுப்பதற்காக அதன் இணைய விதிமுறைகளை திருத்தியுள்ளது. ஊடகங்கள் மீது இறுகி வரும் சீனாவின் பிடி குறித்து சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (IFJ) கவலை தெரிவிக்கிறது.
பொதுமக்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட அனுமதிக்கும் ஊக்கமிகுந்த சமூகம் தான் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை என்று தெரிவிக்கிறது.

கடந்த ஜனவரி 19-ல் ஊடகவியலாளர்களுக்கான வருடாந்திர ஊடக தகுதிப்பாடு புதுப்பிப்பு மதிப்பாய்வு ஜனவரி 20-லிருந்து மார்ச் 19 வரை நடைபெறும் என்று தேசிய பத்திரிகை மற்றும் பதிப்பு அமைப்பு அறிவித்தது.

குறிப்பாக ஊடகவியலாளர்கள் தங்களின் பணி நிமித்தம் சேகரிக்கும் தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். விதிகளை மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாவதுடன், ஊடக தகுதிப்பாட்டை இழக்க நேரிடலாம்.

சீனாவில் மக்கள் ஊடகம் என்றழைக்கப்படும் சமூக வலைதள செய்திகள் மிகவும் பிரபலமடைந்து, ஊடகவியலாளர்கள் தங்களது நிறுவனங்களால் புறக்கணிக்கப்படும் செய்திகளை கூட சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வரும் வேளையில், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 22 அன்று, சீனாவின் மின்வெளி (Cyberspace) நிர்வாகம் தகவல்களைத் திரிப்பது, தவறான ஆதாரங்களைக் சுட்டுவது, பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மற்றும் திருட்டுத்தனமாக செயல்படுவது போன்றவற்றை தடுப்பதற்காக திருத்தப்பட்ட இந்த விதிகளை வெளியிட்டது. ஆன்லைன் பதிவுகளை கட்டுப்படுத்தும் இந்த புதிய விதிகள் வணிக நிறுவனங்கள், பிரபலங்கள், தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் உருவாக்கப்படும் பொது சமூக ஊடக கணக்குகளையும் குறிவைக்கிறது.

கொரோனா பரவியபோது, ​​“ஒரு சில ‘ மக்கள்-ஊடக ’கணக்குகள் ஆன்லைன் வதந்திகளை உருவாக்கி பரப்பின, அத்துடன் மற்றவர்களின் தனியுரிமையை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளன” என்று மின்வெளி கண்காணிப்புக் குழு வாதாடுகிறது. இதனால் “சமூக நல்லிணக்கமும், உறுதியும் குலைகிறது” என்றும் மின்வெளி கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.

பிப்ரவரி 22-லிருந்து நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் பிரச்சினைக்குரிய ஆன்லைன் செயல்பாடுகளுக்கு பொது கணக்குகளையும் சமூக வலைதள நிறுவனங்களையும் பொறுப்பாக்குவதுடன், முறையான கருத்து பரிமாற்றத்திற்கும், ஆரோக்கியமான மின்வெளிக்கும் இது உதவும் என்று மின்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களின் மீதான சீன அரசின் பிடி இறுகிவருவது குறித்து கவலை தெரிவித்துள்ள IFJ, பொதுமக்கள் தங்களது கருத்துகளை சுதந்திரமாக பதிவிட அனுமதிப்பது தான் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்