பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மால்வியா பதிவு செய்துள்ள ஒரு வீடியோவை ‘போலியாக சித்தரிக்கப்பட்டது’ என ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் “போலிச் செய்திகளை” பரப்பியதாக ட்விட்டர் நிறுவனமே ஒருவரை சுட்டிக்காட்டியிருப்பது இது தான் முதல்முறை என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தில்லி சலோ (தில்லி போவோம்) எனும் பேரணிக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு முள்வேலி, மணல்மூட்டைகள், ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை காவல்துறையால் பயன்படுத்தப்பட்டன. கண்ணீர்ப் புகை குண்டுகள், நீர் பீரங்கிகளை பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் காவல்துறை விவசாயிகள் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒரு காவலர் வயதான விவசாயி மீது லத்தியை உயர்த்தி தடியடி நடத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ராகுல் காந்தி உட்பட பலர், வயதான விவசாயி மீது காவல்துறை தடியடி நடத்தும் புகைபடத்தை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மால்வியா உண்மையில் நடந்தது என்ன? மற்றும் பரப்பபட்டது என்ன? என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் காவலர் வயதான விவசாயியை நோக்கி லத்தியை சுழற்றும் காட்சி பதிவாகியுள்ளது.
Rahul Gandhi must be the most discredited opposition leader India has seen in a long long time. https://t.co/9wQeNE5xAP pic.twitter.com/b4HjXTHPSx
— Amit Malviya (@amitmalviya) November 28, 2020
மேலும், ராகுல் காந்தியை “இந்தியாவின் மதிப்பற்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படுகிறார்” என அமித் மால்வியா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் அமித் மால்வியா பதிவை, ட்விட்டர் நிறுவனம் போலியான செய்தி என குறிப்பிட்டுள்ளது. இதற்கு காரணம், முழு காணொளியின் ஒரு பாதியை மட்டுமே அமித் மால்வியா பதிவேற்றியுள்ளார் .
முழு காணொலியில் இரண்டு காவலர்கள் அந்த விவசாயியை தாக்கியுள்ளனர். அதில் முதல் காவலர் லத்தியை வைத்து அவரை தாக்கியதில் அவர் மீது அடி விழுந்துள்ளது, இரண்டாவது காவலர் அவரை லத்தியை உயர்த்தி அடிக்க முயற்சிக்கும் போது அவர் மேல் அடி விழாமல் தப்பிச் சென்றுள்ளார்.
எனவே உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பியதற்காக போலியாக சித்தரிக்க்கப்பட்ட செய்தி என அவர் பதிவில் ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தில், மாவோயிஸ்ட் மற்றும் காலிஸ்தான் (சீக்கிய பிரிவினைவாத இயக்கம்) இயக்கத் தொடர்புகள் இருப்பதாகப் நேற்று (1-12-20) அமித் மால்வியா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.