Aran Sei

உங்கள் ஃபேஸ்புக் பதிவு இனி திடீரென காணாமல் போகலாம்

ஒருநாள் நீங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உங்கள் பதிவோ அல்லது படமோ இதுவரை காணாமல் போயுள்ளதா? இதுவரை அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இனி நீங்கள் அப்படியொரு அதிர்ச்சிக்கு ஆளாகலாம். ஏனென்றால் ஃபேஸ்புக் தனது சேவை விதிமுறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சேவை விதிமுறையில் “ஃபேஸ்புக்கிற்கு பாதகமான சட்ட அல்லது ஒழுங்குமுறை தாக்கங்களைத் தவிர்க்க அல்லது குறைக்க நியாயமான முறையில் அவசியம் என்று நாங்கள் தீர்மானித்தால், உங்கள் பதிவு, சேவைகள் மற்றும் தகவல்களை நாங்கள் அகற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 2020ல் Statista.com என்ற இணையதளம் எடுத்த சர்வே முடிவின்படி இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் 71% பேர் 18 முதல் 34 வயதிற்குள் இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் அரசியல் தளத்திலும் மிக முக்கியமான கருவியாக மாறியுள்ளது. இங்கிலாந்தின் சேனல் 4 என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர் கிறிஸ்டோபர் வெய்லி 2016 அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு உளவியல் ஆய்வுகள் துணையோடு டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதை தரவுகளோடு வெளிக்கொண்டு வந்தார். இதை முன்னிட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்க செனட் சபை முன்பு ஆஜராகி மன்னிப்பு கோரினார் ”நான் ஆரம்பித்த ஃபேஸ்புக் நிறுவனத்தை இப்போதும் நானே நடத்தி வருகிறேன். அதில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் நானே பொறுப்பு.  அவ்வகையில், தற்போது எங்கள் தளத்தின் பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான  முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

2018 அமெரிக்க தேர்தலின் போது சந்தேகப்படும்படியான 32 கணக்குகளை ஃபேஸ்புக் நீக்கியிருந்தது. அந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் குறித்தும் அந்நிறுவனம் தகவல்களை திரட்ட முற்பட்டது. இது குறித்து ‘Reasonable People Unite” என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நடத்தி வந்தவர் The Washington Postக்கு அளித்த பேட்டியில், “ஃபேஸ்புக்கின் விதிமுறைகள் என்னவென்று தெரிந்தால் நான் கட்டாயம் அவற்றை பின்பற்றுவேன். என்னுடைய பக்கத்தை 2.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தார்கள், தற்போது அது முடக்கப்பட்டுவிட்டது” என கூறியிருந்தார்.

2019ல் லட்சக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே நீக்கியதாக ஃபேஸ்புக் அறிக்கை வெளியிட்டது. தவறான செய்திகள் அதிகம் பகிரப்படுவதைத் தடுப்பதாக  கூறி மே 2019ல் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய 265 ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன. இவற்றுள் சில பக்கங்கள் மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பின்தொடரப்பட்டவையாகும்.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் ஐ.டி பிரிவினரால் நடத்தப்பட்டுவந்த 687 பக்கங்கள் மற்றும் அக்கட்சியின் தனிநபர் கணக்குகளையும் ஃபேஸ்புக் முடக்கியது. உண்மையற்ற தகவல்களை பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் நடத்தப்பட்டு வந்த 15 கணக்குகளை முடக்கியதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்தது.

இச்சூழலில் ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் The Wall Street Journal வெளியிட்ட செய்தியில், ஃபேஸ்புக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்கின்  வன்முறையை தூண்டும் விதமான இஸ்லாமிய வெறுப்பு பதிவுகள் நீக்கப்படாமல் இருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தது. ஃபேஸ்புக்கின் இந்திய கொள்கை நிர்வாகி அங்கி தாஸின் தலையீட்டால் பா.ஜ.க கட்சி தலைவர்களின் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கி தாஸ்  2019ல் சிஏஏவை ஆதரித்து ஷேர் செய்த பதிவில் இஸ்லாம் இழிவான சமூகம் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து விமர்சனங்கள் எழுந்த பின்னர், அங்கி தாஸ் அப்பதிவினை நீக்கிவிட்டு அதனைப் பகிர்ந்தற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

சமீபத்தில் Scroll.in தளத்தில் வெளியான செய்தியில் ”இந்திய ஃபேஸ்புக் விளம்பரதாரர்களில் முதல் இடத்தில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.க, கடந்த பிப்ரவரி 2019 தொடங்கி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் ரூபாய் 4.61 கோடியை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் எதிர் கட்சியான காங்கிரஸ் ரூபாய் 1.84 கோடி செலவிட்டுள்ளது. முதல் பத்து இடத்திலுள்ள பிற ஃபேஸ்புக் விளம்பரதாரர்களில் நால்வர் பா.ஜ.க கட்சிக்கு தொடர்புடையவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய விதிமுறை மாற்றம் குறித்து பத்திரிக்கையாளர் கவின் மலரிடம் பேசியபோது “சில நாட்கள் முன் என்னுடைய புகைப்படம் ஒன்று தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது. நான் அதை ரிப்போர்ட் செய்தும் கூட நீக்கப்படவில்லை. நண்பர்கள் அதை ட்விட்டரில் குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டேக் செய்து தொடர்ந்து பதிவிட்ட பின்னர்தான் ஃபேஸ்புக் அந்த புகைப்படத்தினை நீக்கியது. தகுந்த ஆதாரங்களோடு ரிபோர்ட் செய்த பதிவை நீக்கவே இத்தனை சிரமம் இருக்கையில், தற்போது எந்தவித முகாந்தரமும் இல்லாமல் ஃபேஸ்புக் விதிமுறைகளில் புதுவித திணிப்பினை புகுத்தியிருப்பது புதிராகப்படுகிறது’ எனக் கூறினார்.

இதனிடையே மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ​ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்​குக்​கு செப்டம்பர் 1  அன்று ​ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஊழியர்கள் பிரதமர் மோடி குறித்து தொடர்ச்சியாக திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார், நாட்டின் அரசியல் விவகாரங்களில் ஃபேஸ்புக்கின் தலையீட்டை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறு செயல்படுபவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்