Aran Sei

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று (30.09.2022) தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

அக்கடிதத்தில், “தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளாகிய நாங்களும், துப்பாக்கிகளோடு திரியும் மதவெறி கும்பல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றா? – திருமாவளவன் சாடல்

தமிழக காவல்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தியதையும், அதனைத் தொடர்ந்து உபா சட்டத்தை பயன்படுத்தி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதையும் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேலும் ஆர்எஸ்எஸ். அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியளித்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த உத்தரவை திரும்பப் பெற வற்புறுத்தியதோடு, இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2-,ம் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும்.

எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாலை 4.00 மணியளவில் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று சிபிஐ (எம்), சிபிஐ, விசிக சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ban for RSS Rally in Tamilnadu | MK Stalin | VCK Thiruma | Rss Rally | Annamalai | Deva’s Update 31

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்