Aran Sei

ரியல் எஸ்டேட் நிறுவனமா குடிசை மாற்று வாரியம்? – சாலையோர மக்களுக்கு வீட்டுக்கடன் பெற்றுத் தர திட்டம்

ற்றின் வழித்தடங்கள், ஆற்றின் கரைகள், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலங்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்புகளை வழங்குவதற்கு, ‘குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டம்’ (Affordable Housing Partnership Project), தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு, ஒன்றிய அரசு 1.5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு அரசு 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்குகின்றனர். சென்னை தவிர்த்துப் பிறபகுதிகளில் இந்தத் திட்டத்தின் பயனாளிகளிடமிருந்து ஒரு வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னை நகரத்தில் ஒரு வீட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,66,290 வீடுகள் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதில் 27,496 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 10,082 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 17,414 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன

இந்நிலையில், ஒட்டமொத்தமாக இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளர்களின் பங்காக 4,033.97 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது வரை 149.02 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக அரண்செய்-க்கு பிரத்யேகமாக கிடைத்துள்ள குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி (2021), வாரியத்தின் 504வது கூட்டம் நடைபெற்றதாக அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், பயனாளர்கள் செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பயனாளர்களுக்கு வீட்டுக்கடன் பெற்றுத்தரலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதை வாரியம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்கள் பயனாளர்களுக்குக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவதற்கான ஏற்பட்டை வாரியம் செய்யும் என்றும், அதை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், பயனாளர் மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவனத்திற்கிடையில் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்கு குறைந்த பட்சம் 8 சதவீதம் முதல் அதிகபட்சம் 18 சதவீதம் வரையிலான வட்டியில், 75 ஆயிரம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபடும் வட்டி மற்றும் தவணையை திரும்பச் செலுத்தும் காலத்தின் அடிப்படையில், 75 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் பயனாளர் குறைந்த பட்சமாக (20 ஆண்டு) மாதம் 1,157 ரூபாயும் அதிகபட்சமாக (5 ஆண்டு) மாதம் 1,905 ரூபாயும் தவணையாக செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1.5 லட்சம் ரூபாய் கடன் பெறும் பயனாளர் குறைந்த பட்சம் மாதம் (20 ஆண்டு) 1,255 முதல் அதிகபட்சமாக மாதம் 3,809 ரூபாய் (5 ஆண்டு) செலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடின்றி சாலையோரம் வாழும் மக்களுக்கும், வீட்டு வேலை உட்பட மிக சொற்பமாக வருமானம் வரும், வேலைகளை செய்து வரும் மக்களுக்கே இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும் நிலையில், “பயனாளிகள் பெரும்பாலும் நகர்ப்புறத்தில் வசிப்பதால், அவர்கள் பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபடுகின்றனர் மற்றும் வீட்டை நடத்துவதற்கு தேவையான அளவு வருமானத்தைப் பெறுகிறார்கள்” என்று தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை, அவர்களுக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் வாரியத்திற்கு வழங்கிவிடும் என்றும், அந்த வீட்டிற்கான பத்திரத்தை நிதி நிறுவனத்திற்கு வாரியம் வழங்கும் என்றும், கடனை முழுமையாக அடைத்த பிறகு வீட்டுப்பத்திரத்தை நிதி நிறுவனம் பயனாளருக்கு வழங்கும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பயானளர் தவணையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், நிதி நிறுவனம் தனக்கு வர வேண்டிய தொகையைப் பெறுவதற்கு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், தவணையை கட்டத்தவறிய பயனாளியின் வீடு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றொரு பயனாளிக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள், நகர்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (Non – Banking Financial Company) மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் (Micro Finance Institutions) மூலம் இந்த முத்தரப்பு ஒப்பந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு அப்போதை முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. வாழத்தகுதியற்ற சேரிப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சுதாரமான நியாயமான வாழ்விடத்தை உருவாக்கித் தருவதே வாரியத்தின் நோக்கமாகும்.

(தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று, 01.09.2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்