Aran Sei

‘கைது செய்யப்பட்ட விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்க’ – குடியரசுத் தலைவருக்கு விவசாயிகள் கடிதம்

விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்ட விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும் கோரி, விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு  கடிதம் எழுதியுள்ளது.

காவல்துறை மற்றும் அரசின் பிற விசாரணை அமைப்புகளாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ்களை நிறுத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 24), விவசாயிகள் சங்கங்களால் ‘தமன் பிரதிரோத் திவாஸ்’ அனுசரிக்கப்பட்டதையொட்டி, இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

“கடந்த மூன்று மாதங்களாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைப்பு குழுவின் கீழ், டெல்லி எல்லையின் சாலைகளில் அமர்ந்து, அமைதி வழியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீதும் இப்போராட்டத்தின் ஆதரவாளர்கள் மீதும், இந்திய அரசும் மாநில அரசுகளும் பொய் வழக்குகளை புனைந்து, சிறைகளில் அடைத்து வருகிறது. எந்த தவறையும் செய்திடாத அப்பாவி விவசாயிகள், எந்த நிபந்தனையுமின்றி சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.” என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால், டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளர் தீஷா ரவிக்கு, நேற்று முன்தினம் (பிப்ரவரி 22),  டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா பிணை வழங்க உத்தரவிட்டதை, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் இக்கடிதம் வரவேற்றுள்ளது.

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மேலும், “நீதிபதி தர்மேந்தர் ராணா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளவற்றை நாங்கள் வரவேற்கிறோம். இவ்விவகாரத்தில் விதிமுறைகள் பலவற்றை மீறி, சட்டவிரோதமாகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்பட்டு தீஷா ரவியை கைது செய்த டெல்லி காவல்துறைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்