Aran Sei

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

ஓர் ஆண்டிற்கு மேலாக நீடித்துக்கொண்டிருக்கும் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கான இழப்பீடும் பணி நியமனமும், போராடும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை போராடும் விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.

நேற்று(டிசம்பர் 4), இக்கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து முறையான பதில் ஏதும் இல்லாதது குறித்து விவாதிக்க டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அக்கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் மற்றும் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் ஆகியோர், “நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஒன்றிய அரசிடம் பேச பல்பீர் சிங் ராஜேவால், ஷிவ் குமார் காக்கா, குர்னாம் சிங் சாருனி, யுத்வீர் சிங் மற்றும் அசோக் தவாலே ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அடுத்த கூட்டம் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும். எங்கள் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க இரண்டு நாட்கள் இடைவெளி உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

அக்குழுவில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தலைவரான அசோக் தாவ்லே கூறுகையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது, விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது மற்றும் லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்