Aran Sei

மேற்கு வங்கத்தில் சிறுவனை அடித்துத் துவைத்து, 4 பேரை சுட்டுக் கொன்ற மத்திய படைகள் – “இன்னும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்”

image credit : thehindu.com

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் சட்டப் பேரவை தேர்தலின் நான்காவது கட்டத்தில், சனிக்கிழமை அன்று, கூச் பிகார் மாவட்டத்தின் சிதல்குச்சியில் மத்திய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சிதல்குச்சி சட்டப்பேரவை தொகுதியின் பட்கி கிராமத்தின் வாக்குச் சாவடி எண் 126-ல் நடைபெற்றுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடுகளுக்கு முன்பு மத்திய படைகளால் தாக்கப்பட்டு காயமடைந்த 14 வயதான சிறுவன் மினால் ஹக் என்ன நடந்தது என்று விளக்கியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

8-ம் வகுப்பு படிக்கும் மினால் ஹக், சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், அருகில் உள்ள ஒரு வாக்குப் பதிவு மையத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். அந்த நேரத்தில் மத்திய படைகளின் ஒரு அணு அங்கு வாகனத்தின் வந்திருக்கிறது.

“தேர்தல் நாளில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது சரியில்லை என்று நான் நினைத்தேன். நாங்கள் அங்கிருந்து ஓடினோம். அவர்கள் என்னை துரத்தி பிடித்து, இந்தியில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நான் என்ன பதில் சொல்கிறேன் (வங்காள மொழியில்) என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அவர்கள் என்னை தடியால் அடித்தார்கள். என்னுடைய வயிற்றிலும் முதுகிலும் அடித்ததில் நான் தரையில் விழுந்து வாந்தி எடுக்கத் தொடங்கினேன்” என்று மினால் ஹக் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

“14 வயதான ஒரு பையனை பாதுகாப்புப் படையினர் அடித்து துவைத்தனர். அதைத் தொடர்ந்து என் தம்பி ஹமிதுல் 30 மீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் சாவடியை நோக்கிப் போயுள்ளார். அதன்பிறகு அவர் சுடப்பட்டுள்ளார். எங்கள் கிராமத்தின் இன்னும் 3 இளைஞர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்று கொல்லப்பட்ட ஹமிதுலின் அண்ணன் மன்சூர் அலி மியான் கூறியுள்ளார்.

ஹமிதுலின் பக்கத்து வீட்டுக்காரர் சமியுல் மியான் ஒரு முதல் முறை வாக்காளர். அவரும் சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

“கொல்லப்பட்டவர்கள் மார்பிலும் கழுத்திலும் சுடப்பட்டுள்ளார்கள்” என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது ஒரு இனப்படுகொலை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 72 மணி நேர தடையுத்தரவு, தடயங்களை அழித்து விடுவதற்கு உதவும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மத்திய படைகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஏற்கனவே நற்சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“மத்திய படைகள் சுய பாதுகாப்புக்காக சுட்டார்கள் என்றால், அவர்களுக்கு என்ன காயம் ஏற்பட்டது. சட்ட ஒழுங்கை பராமரிக்க தடியடி நடத்தலாம், கண்ணீர் புகை குண்டு வீசலாம். கொல்லப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள். இது ஜனநாயக படுகொலை” என்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய படையின் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : ‘உங்களின் ஒரு வாக்கு ஒரு தோட்டாவிற்கான பதிலடி’ – மம்தா

மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் திலிப் கோஷ் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பரநகரில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் போது,

“கூச் பீகார் மாவட்டத்தின் சிதல்குச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி பையன்கள் வங்காளத்தில் இருக்க மாட்டார்கள். இது தொடக்கம்தான். சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொள்பவர்கள் பொருத்தமான முறையில் கையாளப்படுவார்கள். அவர்கள் சண்டை போட விரும்பினால், சிதல்குச்சியில் என்ன நடந்தது என்று அவர்கள் பார்த்திருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சிதல்குச்சி சம்பவங்கள் நடக்கும். அதனால் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி வன்முறையைத் தூண்டி விடுவதாக திலீப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சுஜன் சக்ரபோர்தி, திலிப் கோஷுக்கு ஜனநாயகத்தின் பொருள் புரியவில்லை. அவருக்கு மனித உரிமைகள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“பாஜக ஒரு பாசிஸ்ட் கட்சி என்று நாங்கள் எப்போதும் சொல்லி வந்திருக்கிறோம். திலிப் கோஷின் பேச்சு அதை உறுதி செய்திருக்கிறது. இதை கண்டனம் செய்வதற்கு வார்த்தைகள் போதாது” என்று திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் கூறியுள்ளார்.

திலீப் கோஷை கைது செய்ய வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்