சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சிலேஜ்ர் பகுதியில், பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக பழங்குடியினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து, உண்மைத்தன்மையைக் கண்டறிய, மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு பழங்குடியினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலேஜ்ர் பகுதியில், பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக கடந்த மே 14 லிருந்து ஏறத்தாழ 20 நாட்களுக்கு மேல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த மே 17 அன்று நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேலும், ஒருவர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினரின் முகாம் அகற்றப்பட வேண்டுமெனவும்,இறந்தவர்களுக்கான நீதி வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து, அந்தப் பகுதியிலேயே இறந்தவர்களுக்கான நினைவுத்தூணை எழுப்பி பழங்குடியினர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், இந்த போராட்டம் மாவோயிஸ்ட்களின் தூண்டுதலால் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,இந்த போராட்டத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அலுவலர்கள் ,காவல் துறையினர் அடங்கிய ,மாநில அரசால் நியமிக்கப்பட்ட உண்மைக் கண்டறியும் குழு பழங்குடியின பிரதிநிதிகளுடன் பேசியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சிலேஜ்ர் பகுதி மக்கள்,” அரசியலமைப்பின் படி, கிராம சபையின் ஒப்புதலின்றி கிராமங்களில் எந்தவொரு புதிய கட்டிடமும் கட்டக்கூடாது என்பது விதி, ஆனால், இந்த முகாம் குறித்து எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை, இரவோடு இரவாக இந்த முகாம் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர்களின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு தெரிவிப்பதாக உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்த நிலையில், அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரச்சொல்லியும் பழங்குடியினர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாக்ஹெல் உண்மைக் கண்டறியும் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.