நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் சீக்கிய டாக்சி ஓட்டுனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கவலைக்குரியது என கூறியுள்ள இந்திய துணைத் தூதரகம், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி 4 அன்று, நவ்ஜோத் பால் கவுர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய தேதியிடப்படாத 26 வினாடிகள் கொண்ட காணொளியில், நியூயார்க் விமான நிலையத்திற்கு வெளியே சீக்கிய டாக்ஸி டிரைவரை ஒருவர் தாக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
விமான நிலையத்தில் இருந்த ஒருவரால் காணொளி எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்காணொளியில், சீக்கியர்மீது தாக்குதல் நடத்தும் அந்நபர், கடுமையான மொழியால் திட்டுவதோடு, சீக்கியரை அடித்து, அவரது தலைப்பாகையை பிடுங்க முயல்கிறார்.
“இக்காணோளி நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்டது. இக்காணொளியின் உரிமை என்னிடம் இல்லை. ஆனால், நமது சமூகத்தில் வெறுப்பு தொடர்ந்து நீடிக்கிறது என்பதையும், துர்வாய்ப்பாக சீக்கிய டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாவதையும் நான் வெளிக்கொணர விரும்புகிறேன்” என்று தனது ட்வீட்டில் நவ்ஜோத் பால் கவுர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு சீக்கிய சமூகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்டின் இன்க்ளூசிவ் அமெரிக்கா திட்டத்தின் ஆசிரியரும் இயக்குநருமான சிம்ரன் ஜீத் சிங் செய்துள்ள ட்வீட்டில், “மற்றுமொரு சீக்கிய டாக்சி ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. நேர்மையான வாழ்க்கையை வாழ முயலும், நம் தந்தைகளும் மூத்தவர்களும் தாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையானது” என்று கூறியுள்ளார்.
மேலும், எங்கள் தலைப்பாகையை தட்டிவிடும்போதோ அல்லது வேறொருவரின் தலைப்பாகையைத் தட்டிவிடுவதைப் பார்க்கும்போதோ நாங்கள் அடையும் வேதனையை, என்னால் சீக்கியர் அல்லாதவர்களுக்கு வார்த்தைகளில் சொல்லி புரிய வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்காணொளி தொடர்பாக ட்வீட் செய்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், “நியூயார்க்கில் சீக்கிய டாக்ஸி ஓட்டுநருக்கு எதிரான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. நாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் இவ்விவகாரத்தை எடுத்து சென்றோம். இவ்வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அவர்களை வலியுறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சீக்கிய டாக்ஸி ஓட்டுனர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.
2019ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய ஊபர் டாக்சி ஓட்டுநர் தாக்குதலுக்கு உட்பட்டு இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
2017ஆம் ஆண்டு, நியூயார்க்கில் 25 வயதான சீக்கிய டாக்சி ஓட்டுநர் தாக்கப்பட்டு, அவரது தலைப்பாகை குடிபோதையில் இருந்த பயணிகளால் தட்டிவிடப்பட்டது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.