Aran Sei

‘சித்திக் கப்பனை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Image Credits: The Tribune India

சிறையில் உள்ள கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சித்திக் கப்பனை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாகக் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (கேயுடபிள்யூஜே) குற்றம்சாட்டியது. இன்று, உச்ச நீதிமன்றத்தில், உத்தரபிரதேச அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷர் மேத்தா இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ளார். சித்திக் ‘பத்திரிகையாளர் முகமூடியை’ அணிந்துகொண்டு ஹத்ராஸில் ‘சாதி பிளவை’ உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சித்திக் காப்பன் – உச்ச நீதிமன்றத்தில் அவசர பிணை மனு

அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்க சென்ற சித்திக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டார்.

சித்திக்கை உடனடியாக விடுவிக்கக் கோரி கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சித்திக்கின் பிணை மனு ஒன்பது நாட்கள் விசாரிக்கப்பட்டது … ஒன்பது நாட்கள் விசாரணைக்குப் பின்னர் அவரது பிணை நிராகரிக்கப்பட்டது … அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ உத்தரவின் பெயரில் தான் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று துஷர் மேத்தா கூறியுள்ளார்.

கேயுடபிள்யூஜே மனு

சித்திக் கப்பன் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கேயுடபிள்யூஜே மனுவில் கூறப்பட்டுள்ளது. சித்திக் அச்சங்கத்தின் செயலாளர் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“முந்தைய விசாரணையின்போது, சித்திக் எங்கு உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாது என்றும் அவரைச் சந்திக்க உங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொன்னீர்கள். ஆனால், சித்திக் கப்பன் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக துஷர் மேத்தா கூறுகிறார்?” என்று நீதிபதி ஷரத், கேயுடபிள்யூஜே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

இதற்குப் பதிலளித்த கபில், “நாங்கள் சிறை அதிகாரிகளிடம் சென்ற போதெல்லாம், அவர்கள் எங்களை நீதித்துறை உத்தரவைப் பெறச் சொல்வார்கள்… நாங்கள் சித்திக்கை சந்திக்க விரும்புகிறோம்… ஒரு வழக்கறிஞர் அவரைச் சந்தித்து வாக்காலத்தில் கையொப்பத்தைப் பெற அனுமதியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நீதிபதி சித்திக் கப்பனை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளார்.

‘பிஎஃப்ஐ அலுவலக செயலாளர்’

சித்திக் அடைக்கப்பட்டுள்ள மதுரா சிறையின் மூத்த கண்காணிப்பாளர் 82 பக்க வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சித்திக் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ (பிஎஃப்ஐ) எனும் இஸ்லாமிய அமைப்பின் அலுவலக செயலாளர்” என்று கூறப்பட்டுள்ளது. அவர் கேரளாவைச் சேர்ந்த ‘தேஜாஸ்’ எனும் பத்திரிகை நிறுவனத்திற்கு பணிபுரிவதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்தார். ஆனால், அந்த நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் கேயுடபிள்யூஜே-க்கு அவகாசம் அளித்துள்ளது. விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்