Aran Sei

ஊபா சட்டத்தில் சித்திக் கப்பான் : 5000 பக்க குற்றப்பத்திரிகை சட்டப்படி செல்லாது என வாதம்

ட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் உட்பட எட்டு பேர்மீது, உத்தரபிரதேச காவல்துறையினர் தாக்கல் செய்த 5,000 பக்க குற்றப்பத்திரிக்கையானது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் விசாரணைக்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சட்டப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராஸுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, சித்திக் கப்பான் மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (ஊபா) வழக்குகளைப் பதிவு செய்தது.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சித்திக் கப்பானை விடுவிக்கக் கோரி சட்ட போராட்டத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு இதுவரை பிணை வழங்கப்படவில்லை.

அவ்வழக்குகளின் தொடர்சியாக, ஏப்ரல் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் மதுரா நீதிமன்றத்தில், அம்மாநில காவல்துறையின் ஐந்து பேர் கொண்ட சிறப்பு பிரிவு, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை (பி.எஃப்.ஐ) சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மீது 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

சித்திக் கப்பான் (பத்திரிகையாளர்), அதிகூர் ரெஹ்மான், ரவூப் ஷெரீப், முகமது டேனிஷ், ஆலம், மசூத் அகமது, ஃபெரோஸ் கான், மற்றும் ஆசாத் பத்ருதீன் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன.

மேலும், அதில், குற்றம் சாட்டப்பட்ட இந்த எட்டு பேரும் உத்தரபிரதேசத்தில் அமைதியின்மையையும் கலவரங்களையும் உருவாக்கும் நோக்கத்திற்காக, மஸ்கட் மற்றும் தோஹாவை சேர்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ .80 லட்சம் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 12) இந்தக் குற்றப்பத்திரிக்கை தொடர்பாக, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பாக மனு ஒன்றை வழக்கறிஞர் மதுபன் தத் தாக்கல் செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

அதில், “ஏப்ரல் 3 ஆம் தேதி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிபதி அனில் குமார் பாண்டே முன்பு ஐந்து பேர் கொண்ட காவல்துறையின் சிறப்பு பிரிவு சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையானது பயனற்றது என்றும், சட்டரீதியாக செல்லுபடியாகாதது என்றும் கூறப்பட வேண்டும். காரணம், இதில் பதியப்பட்டுள்ள சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் விசாரணை நடத்த மாநில அரசிடமோ அல்லது மத்திய அரசிடமோ முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு காவல்துறையினர் அனுமதி பெற்றவில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்