Aran Sei

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

டந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருக்கும் புல்கர்கி கிராமத்தில், ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால், 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

கொடூரமான  தாக்குதல், பெண்ணின் மரணம், அதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதமே இல்லாமல் பெண்ணின் உடலை காவல்துறையினர் தகனம் செய்தது என இந்தச் சம்பவம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.

இது தொடர்பாக அக்டோபர் 5-ம் தேதி செய்தி சேகரிப்பதாக, மலையாள மொழி இணையதளமான அஷிமுகத்தை சேர்ந்த சித்திக் கப்பன், டெல்லியில் இருந்து புல்கர்கி நோக்கி கிளம்பினார்.

ஹத்ராஸ் சம்பவம்: உ.பி.காவல்துறையின் கூற்றுக்கு முரணாகக் கருத்து தெரிவித்த அரசு மருத்துவர் பதவி நீக்கம்

ஹத்ராஸ் பகுதியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் வைத்து சித்திக் கப்பன் மற்றும் அவருடன் காரில் பயணித்த மூன்று பேரையும் காவல்துறை கைது செய்தது.

சித்திக் கப்பன், தனது குடும்பத்தினர் மற்றும் தனது வழக்கறிஞருக்கு அளித்த தகவலின் படி,  அவரைக் காவல்நிலையத்தில் வைத்து முகத்தில் அறைந்ததோடு, தொடைகளில் லத்தியால் தாக்கி உள்ளனர்.  மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை,  விழித்திருக்க நிர்பந்திக்கப்பட்டதோடு, உடல் மற்றும் மன அளவிலான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயாளியான அவருக்கு மருத்துகள் உட்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சித்திக்கின் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கவும், சாதி கலவரத்தைத் தூண்டிவிடவும் ஹத்ராஸ் செல்ல இருந்ததால் தான் கப்பன் உள்ளிட்ட  மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஹத்ராஸ் – நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை : உச்சநீதி மன்றம் உத்தரவு

கப்பன் உடன் பயணித்தவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ)  அமைப்பை சேர்ந்தவர்கள். அதன் நிர்வாகிகளுக்கு உத்திரபிரதேச அரசால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக, காவல்துறையினர் கூறினர்.

கப்பன் தனது செயல்பாடுகள் மூலம்  ஒரு இணையதளத்தின் செய்தியாளரை போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார், உண்மையில் அவரும் பி.எஃப்.ஐயின் ஒரு உறுப்பினராக இருந்தார் என காவல்துறையினர் குற்றம் சாட்டினர்.  ஆனால் இதற்கு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்,  கப்பனின் வழக்கறிஞர் மற்றும் பிஎஃப்.ஐ அமைப்பினர் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச காவல்துறை முற்றிலும் தவறான தகவலை கூறி, கப்பனை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என கப்பன் நிர்வாகியாக இருக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹத்ராஸ் வழக்கு – சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியில் தொடர்வதேன்? – உயர் நீதிமன்றம் கேள்வி

கப்பன் “ஒரு பத்திரிகையாளர் மட்டுமே” என்றும் “பத்திரிகைப் பணியை நிறைவேற்றுவதற்காக ஹத்ராஸ் செல்ல முயன்றார்” என்றும் தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. அவரை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது நிறுவனமான அஷிமுகாம், கப்பன் அந்த நிறுவனத்தின்  சம்பளப் பட்டியலில் இருப்பதாகவும், அவர் ஹத்ராஸுக்கு  பணி தொடர்பாக சென்றதாகவும்  அறிக்கை வெளியிட்டது.

இது தொடர்பாக  கப்பனின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ், பிபிசியிடம் கூறுகையில், முதலில் கப்பன் மீது ஜாமீன் வெளிவர முடியாத குற்றங்கள் மட்டுமே பதியப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு தனங்களுக்கு பின்னர் அவர் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தி, அவருக்கு ஜாமீனே கிடைக்காத வகையில், அவர் மீது சட்டவிரோத செயல்கள்  (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஹத்ராஸ் கொடூரம் – `ஆணவக் கொலை’ எனும் கோணத்தில் விசாரிக்கிறதா சிபிஐ?

கப்பன் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர், ”ஒரு டாக்ஸியை சிலருடன் பகிர்ந்து கொள்வது குற்றமாகாது” என மேத்யுஸ் கூறினார்.

“ஒரு பத்திரிகையாளர் பல்வேறு தரப்பு மக்களை சந்திக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட, மற்ற குற்றவாளிகளுடன் இருப்பது கைதுக்கு  காரணமாக ஏற்க முடியாது,” என  மேத்யூஸ் குறிப்பிட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கப்பன்  கைது செய்யப்பட்டு பல வாரங்கள் வரை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டு 29 நாட்கள் கழித்து, நவம்பர் 2-ம் தேதி, அவர் தனது குடும்பத்திற்கு முதல் தொலைபேசி அழைப்பை செய்ய அனுமதிக்கப்பட்டார்.  எட்டு நாட்களுக்கு பின்னர் அவர் தனது மனைவியுடன் பேசினார். உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 47 நாட்களுக்குப் பிறகு தான் மேத்யூஸ் கப்பனை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

ஹத்ராஸ் வழக்கில் உத்தரபிரதேச அரசின் பொய் அம்பலமாகியுள்ளது – அகிலேஷ் யாதவ்

கடந்த மாதம், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது, அவர் படுக்கையில் இருக்கும் அவரது 90 வயது தாயாரை பார்க்க. அவர் நான்கு நாட்கள் அங்கு இருந்தார், உத்தர பிரேதேசத்திலிருந்து ஆறு போலீசாரும், மாநிலத்திலிருந்து இரண்டு டஜன் போலீசாரும் வெளியே காவலுக்கு நின்றனர்.

இது ஒரு பெரும் பயணம் என கூறிய கப்பனின் மனைவி ராய்ஹநாத், “அவர் தனது அம்மாவின்  மோசமான உடல்நலம் குறித்து கப்பன் பதட்டமாக இருந்தார், எங்கள் நிதி மற்றும் எங்கள் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவர் கவலைப்பட்டார். எனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் ஒரு இஸ்லாமியர் என்பதால் இலக்கு ஆக்கப்பட்டுள்ளார்” என கூறினார்.

ராய்ஹநாத் கருத்துப்படி, காவல்துறையினர் மீண்டும் மீண்டும் கப்பனிடம்  மாட்டிறைச்சி சாப்பிட்டீர்களா என்று கேட்டுள்ளனர்.  மேலும் கப்பன் எத்தனை முறை  டாக்டர் ஜாகிர் நாயக்கை சந்தித்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர். தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்பட்ட தலித்களுடன் ஏன் இஸ்லாமியர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கின்றனர் என காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

“யாராவது சித்திக் கப்பன்  இஸ்லாமியர் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொன்னால், நான் அந்த கருத்தை ஆதரிப்பேன்” என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அபிலாஷ் எம்.ஆர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை  உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய திரு. அபிலாஷ், இது ஒரு “அரசியல் சூனிய வேட்டை” என்றும் “அரசியல் துன்புறுத்தல் வழக்கு” என்றும் கூறினார். கப்பனின் “அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

இந்து துறவி யோகி ஆதித்யநாத் தலைமையிலான, தற்போதைய உத்தர பிரதேச அரசு, இஸ்லாமியர்களை நியாயமற்ற முறையில் குறி வைத்து வருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யோகி ஆதித்யநாத் இந்தியாவின் மிகவும் பிளவுபடுத்தும் மற்றும் தவறான அரசியல்வாதி என்று வர்ணிக்கப்பட்டதோடு, அவரது தேர்தல் பேரணிகளை பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறிச் செயல்களை தூண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்ச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

ஹத்ராஸ் நகரில் இளம் பெண்ணின் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் மரணத்தை விசாரிக்கும்  விதத்தால் யோகி ஆதித்யநாத்தி  அரசாங்கமும் காவல்துறையும் உலகளாவிய கண்டனத்தை ஈர்த்தன, குறிப்பாக அதிகாரிகள் இறந்த பெண்ணின் குடும்பம் மற்றும் ஊடகத்தை அவரது இறுதிச் சடங்கில் இருந்து விலக்கி வைத்து நள்ளிரவில் அவரது உடலை தகனம் செய்தது கண்டனத்துக்குள்ளானது.

இளம் தலித் பெண் இறந்த சில நாட்களில் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. உத்தர பிரதேசத்தில், போராட்டக்காரர்களை தடிகளால் அடித்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க விடாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டதற்காக அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுக்கப்பட்டனர்.

அக்டோபர் 4 அன்று,  கப்பன் ஹத்ராஸ்க்கு  சென்றதற்கு ஒரு நாள் முன்பு, திரு ஆதித்யநாத், “அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தஒரு சர்வதேச சதி” இருப்பதாகவும், “இந்த சம்பவம் அவரது அரசின் முன்னேற்றத்தில் வருத்தமடைந்தவர்களால் தூண்டப்பட்டது” என கூறினார்.

ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் : காவலை நீட்டித்த நீதிமன்றம்

திரு. கப்பன் மீது குற்றச்சாட்டுக்குரிய ஒரு ஆதாரத்தை கூட காவல்துறையினரால் தாக்கல் செய்ய முடியவில்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. அபிலாஷ் கூறினார். ஆனால், ஹத்ராஸ் செல்ல வேண்டாம் என்று நிருபர்களை எச்சரித்த  விஷயத்தில் அவர்கள்  வெற்றி பெற்றுவிட்டனர் என அவர் கூறினார்:

கப்பன் கைது “வழக்கமான நபரை கைது செய்வதில் இருந்து  வேறுபட்டது” என்று அவரது வழக்கறிஞர் திரு மேத்யூஸ் கூறினார். “ஊடகங்களைத் தடுப்பது  ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுவது” என்று அவர் கூறினார்.

கீதா பாண்டே (பிபிசி இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்க சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்