தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதுகிறார் என்றும் மிஸ்டர். எடியூரப்பா, உங்கள் அரசாங்கம் வேலை செய்கிறதா என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு வேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோலியின் காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இவ்விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே மூன்று காணொளிகளை வெளியிட்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், மார்ச் 27 ஆம் தேதி வெளியிட்ட நான்காவது காணொளியில், “கடந்த காலத்தில் ஒரு ஆட்சியையே கீழே தள்ளிய இவர். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர். இதன் பொருள் இவர் எவ்வளவு தூரத்திற்கும் சென்று என் குடும்பத்திற்கும் எனக்கும் தீங்கு விளைவிப்பார்.” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், என் குடும்பத்தினர் முன்னிலையில் மட்டுமே நான் காவல்துறையிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பேன் என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக, இன்று (மார்ச் 29), சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்டுகளை பதிந்துள்ளார். அதில், “தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பாதிக்கப்பட்ட அப்பெண் கடிதம் எழுதுகிறார். இது வேதனையானது அதிர்ச்சியூட்டும் படியான செய்தி. மிஸ்டர். எடியூரப்பா, உங்கள் அரசாங்கம் வேலை செய்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The news of CD victim, writing a letter to High Court Chief Justice about threat to her life, is distressing & terrifying.
Mr. @BSYBJP,
Is your govt working in Karnataka?1/3
— Siddaramaiah (@siddaramaiah) March 29, 2021
“முன்பு தான் தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட கூறினார். இப்போது தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறுகிறார். அப்பெண்ணிற்கு ஏதேனும் நேர்ந்தால், கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் பசவராஜ் எஸ் பொம்மை உட்பட மொத்த அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும், “உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், சிறப்பு விசாரணைக் குழு நடத்தும் விசாரணை குறித்து தன்னுடைய அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அக்குழு தன்னுடைய எதிரிகளுடன் சேர்ந்து ஆதாரங்களை அழிப்பதாக அவர் அச்சப்படுகிறார். இந்தக் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்பதால், இதற்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.” என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.